பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

583


போல் தலையைக் குனிந்தான். குதிரைகளை அவரவர் பக்கத்தில் நடத்திச் செலுத்திக்கொண்டே அவர்களும் பிட்சுக்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள். பிட்சுக்களின் பிரயாண காலத்தில் பாடிக்கொண்டு சென்ற கீதங்களை அவர்களும் சேர்ந்து பாடினார்கள். அருள் நிறைந்த மனிதர்களோடு நடந்து சென்ற அந்தப் பயணத்தில் பொழுது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கு வெளுக்கத் தொடங்கும் புலர் காலை நேரத்தில் அவர்கள் அனுராதபுரத்துக்குள் நுழைந்தார்கள். அந்தப் பெரும் நகரம்தான் அன்றைக்கு வைகறையிலே எவ்வளவு கோலாகலமாக இருந்தது! எங்கு பார்த்தாலும் புதுமணல் பரப்பிய அலங்காரப் பந்தல்கள்; வாழையும், பனையும் கமுகும், மாவிலையும் கட்டிய திருத்தோரணங்கள், செவிகள் நிறைய இடைவிடாமல் கேட்கும் மங்கல வாத்தியங்களின் இனிய ஒலிகள், நகரம் முழுவதும் பூக்களின் நறுமணமும் அகிற்புகை வாசனையும் பரவின. தெருக்களெல்லாம் ஒரே கூட்டம். முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்துகொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு கூட்டத்திலும் தனியாகத் தெரியும் பிட்சுக்கள். எல்லாக் காட்சிகளும் சேர்ந்துகொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன.

பெளத்த விஹாரங்களிலெல்லாம் ஒளிச் சுடர்கள் பூத்தது போல் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். பிட்சுக்களின் கீத ஒலிகள், அரசருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமாறு’ வேண்டிக் கொண்டிருந்தன. தெரு ஓரங்களிலும் பெளத்த விஹாரங்களுக்கு அருகிலும், வண்ணக் காடுகள் முளைத்துப் படர்ந்து மலர்ந்ததுபோல் பூக்களை மலை மலையாகக் குவித்திருந்தார்கள். பொன் நிற உடலும், மின்னலென இடையும் புன்னகை இதழ்களும் அன்னநடையுமாகத் தேவலோகத்து நாட்டிய சுந்தரிகளைப் போல் இளம் பெண்கள் இரண்டு உள்ளங் கைகளிலும் மலர்களை ஏந்திக்கொண்டு புத்தர் பெருமானை வழிபடச் சென்று கொண்டிருந்தார்கள்.