பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

587


குமாரபாண்டியனுக்குத் தன்னை நினைத்துப் பார்க்கவே நேரம் இல்லை. வெள்ளணிவிழாவின் உற்சாகத்தில் மூழ்கிப் போனான் அவன். காசிபமன்னர் அனுராதபுர நகரத்திலுள்ள ஒவ்வொரு பெளத்த விஹாரத்துக்கும் அவனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தார். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் பிறந்த நாள் பரிசளிப்புக்களை வழங்கினார். அந்த ஆரவாரங்களுக்கு நடுவே குமாரபாண்டியனுக்கு அவரிடம் அதிகம் பேச நேரமில்லை. அவருக்கும் குமாரபாண்டியனிடம் விரிவாக எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ள அவகாசமில்லை. கனகமாலை இரண்டொருமுறை அவனைச் சந்தித்தபோது புன்முறுவல் புரிந்தாள். இப்படியாகக் குமாரபாண்டியன் அந்த நாட்டில் கால் வைத்த முதல்நாள் உல்லாசமாகக் கழிந்தது.


3. கனகமாலையின் புன்னகை

இந்தக் கதையில் திடீரென்று எழிலோவியமாக வந்து தோன்றிக் குமாரபாண்டியனையும், நமது நேயர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் கனகமாலை என்னும் பேரழகியைப் பற்றி இங்கே சிறிது விவரித்துச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழைய ஈழநாடு மூன்று பெரும் பிரிவுகளாக இலங்கியது. தென் கிழக்குப் பகுதி “உரோகணரதம் என்றும், நடுப்பகுதி ‘மாயா ரதம் என்றும் வடபகுதி இராச ரதம் என்றும் பெயர் பெற்றிருந்தன. வடக்குப் பகுதியாகிய இராசரத நாட்டில்தான் அனுராதபுரம், பொலன்னறுவை முதலிய கோநகரங்கள், கலைவளம் நிறைந்த ஊர்கள் எல்லாம் இருந்தன. தென்கீழ்ப்பகுதியாகிய உரோகணரதத்திலிருந்து சிற்றரசன் ஒருவனின் புதல்வியைக் காசிப மன்னர் தம் இளமையில் கர்தலித்து மணம் புரிந்து கொண்டிருந்தார். அவளிடம் அவருக்குப் பிறந்த பெண்தான் கனகமாலை. காசிப மன்னரின் உள்ளத்தில் அந்தப் பெண்ணின்