பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அதே அறையின் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் போய் மறைந்தான் கூத்தன்.

அவன் மறைந்த இடம் பெண்கள் கப்பலில் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக மறைவிடம்போல் பட்டுத் திரைகளால் தடுக்கப்பட்டிருந்த ஒதுக்கிடமாகும். அவன் அந்தத் திரைமறைவில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் தற்செயலாக விழித்துக்கொண்ட குழல்வாய்மொழி படுக்கையில் எழுந்திருந்து உட்கார்ந்துகொண்டாள். தான் காற்றுக்காகத் திறந்து வைத்துவிட்டுப்படுத்துக்கொண்ட அறைக்கதவை எப்போது யார் உட்புறம் வந்து தாழிட்டிருக்க முடியுமென்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது. படுக்கையில் உட்கார்ந்தபடியே அறைக்குள் நான்கு பக்கமும் மேலோட்டமாகப் பார்த்து, வேறு யாரும் தன் அறைக்குள் இல்லையென்று தீர்மானித்தாள் குழல்வாய்மொழி. ஆனால் அதே சமயம் தன்னுடைய கலிங்கங்களும் (ஆடைகளும்) அலங்காரப் பொருள்களும் அடங்கிய தந்தப்பெட்டி திறந்து கிடந்ததைப் பார்த்தவுடன் அவளுடைய சந்தேகமும், பயமும் மேலும் வளர்ந்தன. அவள் முதுகுக்கு நேரே பின்புறம்தான் அந்த மறைவிடம் இருந்தது. எழுந்திருந்து வாசல் கதவைத் திறந்து சேந்தனையாவது, கூத்தனையாவது கூப்பிட்டு அறையை நன்றாகச் சுற்றிப்பார்க்கச் சொல்லலாமென்று நினைத்தாள் குழல்வாய்மொழி.

எழுந்திருப்பதற்காகப் படுக்கையிலிருந்து வலது காலை எடுத்து வைத்தாள் அவள். திடீரென்று பின்பக்கமிருந்து இரு மென்மையான கைகள் முரட்டுத்தனமாக அவள் வாயைப் பொத்தின. பயந்து வீரிட்டு ஓவென்று கூக்குரலிட நினைத்தாள் குழல்வாய்மொழி. முடியவில்லை. அவளது மென்மையான பொன்னிற உடல் பயத்தால் நடுங்கியது. கண்விழிகள் பிதுங்கின. தலையைச் சிரமப்பட்டுத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். வனப்பே வடிவமாக ஒரு பெண் நின்று கொண்டு அவளை அந்தப் பாடுபடுத்திக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் உடுத்தியிருந்த பட்டுப்புடவையையும், கச்சையையும் (மார்பணி) குழல்வாய்மொழி கவனித்தாள். அவை தன் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிந்தது. “ஒரு பெண்ணுக்கா அவ்வளவு துணிவு: ஒரு பெண்ணின் கைகளுக்கா அந்த