பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

617


அந்தக் காட்டின் அமைதியான அழகு தாறுமாறாகித் தோற்றமளித்தது.

“கண்ணுக்குத் தெரிகிற காட்சிகளைப் பார்த்தால் நேற்றிரவு அந்தப் பெண் உயிர் பிழைத்திருக்க முடியுமென்று என்னால் நம்பமுடியவில்லை. பாவம்! அவள் தலையில் எழுதியிருந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது” என்று புத்தபிட்சு பரிதாபமான குரலில் கூறினார். அவர் தம் வார்த்தையைச் சொல்லி முடிக்கவும், “அதோ பாருங்கள் அடிகளே! யாரோ விழுந்து கிடக்கிறாற் போலிருக்கிறது” என்று முகத்தில் பயமும், வியப்பும் படரச் சக்கசேனாபதி ஒரு புதரைக் கைநீட்டிக் காட்டிக் கூச்சலிடவும் சரியாக இருந்தது. முதல் நாளிரவு தண்ணிர் பாய்ந்து ஓடிய அடையாளம் அங்கே தெரிந்தது. மரக்கிளைகளின் முறிவுகளும் செடி கொடித்துறுகளும் அடர்ந்து பின்னிக் கிடந்த புதரில் தண்ணிர் இழுத்துவந்து செருகினாற்போல் அந்த உடல் கிடந்தது. தோற்றத்திலிருந்து பெண்ணுடல்தான் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

“அந்தப் பாவிப் பெண்ணாகத்தான் இருக்கும். நேற்று நான் எவ்வளவு ஆதரவோடு அவளிடம் பேசினேன். எப்படியாவது அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் என் உள்ளத்தில் உறுதியாயிருந்தது. ஆனால் புத்த பகவான் திருவுள்ளம் வேறாயிருந்திருக்கிறது. அடப் பாவமே! நேற்றே நான் சொல்லியபடி கேட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காதே! வாருங்கள் போய்ப் பார்க்கலாம்” என்று முன்னால் ஓடினார் புத்தபிட்சு. இராசசிம்மனும், சக்கசேனாபதியும் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். பிட்சு அந்தப் பெண்ணின் உடைகளைச் சரிசெய்துவிட்டு, “அவள்தான் ஐயா! அநியாயமாகச் செத்துத் தொலைந்திருக்கிறாள்!” என்று கூறிக்கொண்டே, அந்த உடலைப் புதருக்குள்ளிருந்து வெளியே தூக்கி வந்து முகம் தெரியும்படி தரையில் கிடத்தினார். சக்கசேனாபதியின் விழிகளில் அநுதாபம் மின்னியது. - - கண்களில் சந்தேகமும் பீதியும் மிளிரக் கொஞ்சம் கீழே குனிந்து அந்த முகத்தை உற்றுப் பார்த்தான் இராசசிம்மன். அவன் முகம் பயத்தால் வெளிறி வாய் கோணியது. அடுத்த கணம் அவன் வாயிலிருந்து வெளியேறிய ஒரு பெயர் அந்தக் காடு முழுவதும் எதிரொலித்து அலறிக் கொண்டிருந்தது.