பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பாண்டிமாதேவி / முதல் பாகம்


கோலத்துக்கு ஒரு சிறிய விதிவிலக்குப் போல் இடையில் ஒரு வாள் உறையோடு தொங்கியது.

அவர்கள் நின்றுகொண்டிருந்த வழியாக வந்து போய்க் கொண்டிருந்த கூட்டத்தினரில் அந்த இளைஞனின் விசித்திரத் தோற்றத்தையும், அவன் சிரித்துச்சிரித்துப் பேசும் வேடிக்கை யான காட்சியையும் ஒரு கணம் நின்று வியப்புடன் பார்த்து விட்டுப் போகாதவர்களே இல்லை. மகாமண்டலேசுவரர் தென் மேற்குத் திசையில் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த இளைஞனின் பக்கமாகத் திரும்பி, “சேந்தா! நீ கிளம்பு. இன்று மாலை மகாராணியார் கன்னியாகுமரிக்கு வரப் போவதை மறந்து விட்டாயா? இங்கே நின்று கொண்டு உன் சிரிபொலியால் கடற்கரையையே அதிர அடித்துக் கொண்டிருக்கிறாயே! கப்பல் வந்ததும் நானும், குழல்மொழியும் அவரை மாளிகைக்கு அழைத்துக்கொண்டு போகிறோம். எவ்வளவு நாழிகையானாலும் நாங்கள் இங்கே இன்றிரவு தங்க மட்டோம். மாளிகைக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம். அதே போல் நீயும் மாளிகைக்கு வந்துவிடு. உனக்காகத் தென்கரையில் அம்பலவன் வேளானைத் தோணியோடு காத்திருக்கச் செய்வேன். மகாராணி கன்னியாகுமரிலிருந்து கோட்டைக்குத் திரும்பிப் போய்ச் சேர்கிறவரை என்னென்ன நடக்கிறது என்பதை ஒன்று விடாமல் கவனித்துக்கொண்டு வந்து சொல்லவேண்டும். நீ அங்கே சென்று கவனிப்பதை வேறு யாரும் தெரிந்து கொள்ளாதபடி மறைந்து கவனிக்க வேண்டியது மிக முக்கியம். நீ வந்து தகவல்களைக் கூறுகிற வரையில் நான் உறங்காமல் உனக்காக விழித்துக் கொண்டு காத்திருப்பேன்.”

மகாமண்டலேசுவரரின் இந்தக் கம்பீரமான கட்டளையைக் கேட்டதும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் குடி கொண்டன.