பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

643


மகாராணியிடமும் கூறி அவருடைய ஆவலை வளர்த்து விட்டிருந்தார். குமாரபாண்டியன் வந்ததும், அவனைக் கலந்துகொண்டு கோட்டாற்றிலுள்ள படைகளையும், தளபதியையும், போர் முனைக்கு அனுப்பலாமென்பது மகாமண்டலேசுவரரின் நினைப்பாயிருந்தது. எந்த விநாடியில் குமாரபாண்டியன் கப்பல் தம் பெண்ணுடனும் சேந்தனுடனும் வந்து இறங்கினாலும் உடனே ஓடிவந்து அதைத் தமக்குத் தெரிவிப்பதற்காக விழிஞத்துக்கு ஆள் அனுப்பியிருந்தார் அவர். தளபதிக்குத் தெரியாமல் அவருடைய ஆள் விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவருக்குத் தெரியாமலே தன்னுடைய சார்பில் ஆபத்துதவிகள் தலைவனை விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தான் தளபதி. குமாரபாண்டியன் தம் மகளுடனும், சேந்தனுடனும் வந்து சேரவேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார்; குமாரபாண்டியன் தன் தங்கை பகவதியோடு விழிஞத்தில் வந்து இறங்க வேண்டுமென்று வல்லாளதேவன் எதிர்பார்த்தான். அவர்கள் இருவருக்கும் அப்பால், ஒவ்வொரு கணமும் ஆசையும் பாசமும் துடிக்கத் தாய்மைப் பேராவலுடன் மகாராணியும் அந்த வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் வெள்ளுருக்கு அருகில் இரண்டு படைகளும் கைகலந்த செய்தி தெரிந்தது. நிலைமை அவ்வளவுக்கு முற்றிய பின்பும் கோட்டாற்றிலுள்ள சேனைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பாமல் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று எண்ணித் தயங்கினார் மகாமண்டலேசுவரர். போர் தொடங்கிச் சில நாட்கள் கழிந்தபின்பும் குமாரபாண்டியன் வரவு பற்றி ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, போர் முனையிலிருந்து பெரும் பெயர்சாத்தன் அனுப்பிய துரதன் அவசரமாக வந்து அபாய நிலையைத் தெரிவித்தான். அவன் தெரிவித்ததிலிருந்து வடதிசைப் படையை எதிர்க்கக் கரவந்தபுரத்து வீரர்களும், சேரநாட்டுப் படைகளும் காணவில்லை என்று தெரிந்தது. மகாமண்டலேசுவரரே நேரில் புறப்பட்டுக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போனார். அவசரமாகத் தளபதியைச் சந்தித்தார். போர் முனை நிலையைக் கூறினார்.