பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

647


சுவரர் வாய் திறந்து சொன்னபோது தளபதி அவருக்கு அருகிலேயே இல்லை. சிறிது தொலைவு தள்ளி ஒதுங்கிப் பயந்து நிற்பவன் போல் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் வியர்வை அரும்பி வழிந்தது. உடலில் ஏற்பட்டிருந்த நடுக்கம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. தெரியாமல் பாம்புப் புற்றை மிதித்துவிட்டு இடறி விழுந்தவன் பயத்தோடு எழுந்து நிற்கிற மாதிரி நின்றான் வல்லாளதேவன்.

வானத்துக்கும் பூமிக்குமாக, நிறுத்தி வைத்த சிலைபோல் அசையாமல் நின்றுகொண்டிருந்த மகாமண்டலேசுவரர் மெல்லக் கீழே குனிந்தார். நழுவி விழுந்து கிடந்த தளபதியின் வாளைக் கையில் எடுத்துக்கொண்டார். நிதானமாக அடியெடுத்து வைத்து நடந்தார். அவனை அணுகினார். ஒருவர் மூச்சுக் காற்றை மற்றொருவர் உணர முடிந்த அளவுக்கு நெருங்கி நின்று கொண்டார்.

“இந்தா, உன்னுடைய வாள்! இப்போது என் நெஞ்சுக் குழி உன் கைக்கு மிக அருகில் இருக்கிறது. பாய்வதற்கும், வாளை ஓங்குவதற்கும் வேண்டிய சிரமத்தைக்கூட உனக்கு நான் அளிக்கச் சித்தமாயில்லை. என்னை இந்த வாளால் கொன்றுவிடு. நான் அழிந்து போக வேண்டிய காலம் வந்து விட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் நான் அழிவது உன்னைப் போலவே இன்னும் பல பேருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கழற்கால் மாறனாரும், அவரோடு சேர்ந்த கூற்றத் தலைவர்களும் என்னை இவ்வளவு சுலபமாகக் கொன்றதற்காக உன்னைப் பாராட்டுவார்கள். படையெடுத்து வந்திருக்கும் பகையரசர்கள் பெருமை கொள்வார்கள். என்னுடைய அறிவின் கூர்மைக்குப் பயந்து தங்களுடைய எண்ணற்ற பேராசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தெரியாமல் தயங்கிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்குத் திருப்தியளிக்கும் தெரியுமா, இந்தக் கொலை?” அவருடைய சொற்களின் வேகத்தையும், கண்களின் கூர்மையான பார்வையையும் மிக அருகில் தாங்கிக்கொள்ள முடியாமல் தலை குனிந்தான் தளபதி. ... “

“இவ்வளவுதானா உன் துணிவு! நீ உண்மை வீரன் இல்லை!

உணர்ச்சியால் முரடன்! மனத்தால் கோழை! என்னை