பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


எதிரியாகக் கொள்வதற்கேற்ற தகுதியும், பெருமையும் கூட உனக்குக் கிடையாது. நீ சாமான்யமானவன்” என்று ஏளனமாகச் சொல்லிக் கொண்டே, கையிலிருந்த வாளை அலட்சியத்தோடு சுழற்றி மூலையில் வீசியெறிந்துவிட்டார் மகாமண்டலேசுவரர். வல்லாளதேவன் தலை நிமிரவே இல்லை.

“உன் உணர்ச்சிகளை என் சாமர்த்தியத்தினால் கிளறி வேடிக்கை பார்க்க விரும்பவில்லை நான். ஆயிரக்கணக்கான வீரர்களின் மதிப்புக்குரிய படைத்தலைவனே! நீ உண்மை குற்றவாளி. நான் உன்மேல் கொண்ட ஆத்திரம் நியாயமானது. நீ பதிலுக்கு என்மேல் ஆத்திரப்படுகிறாயே, அது தான் நியாயமற்றது. என்மேல் அவ்வப்போது உனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் உன்னை என்னென்னவோ செய்யத் துரண்டியிருக்கின்றன. அறியாமையால் தாயின் ஒழுக்கத்தைப் பற்றியே சந்தேகப்படும் பேதைப் புதல்வனைப் போல நீ என்னைச் சந்தேகத்தோடு நோக்கி வந்திருக்கிறாய். உன்னுடைய சந்தேகங்களை இதுவரை மன்னித்து வந்திருக்கிறேன். நீ கடைசியாகச் செய்த தவறு, குமாரபாண்டியனைக் காண்பதற்காக உன் தங்கையை இரகசியமாக ஈழ நாட்டுக்கு அனுப்பியது. இவையெல்லாம் எனக்குத் தெரியாதென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். முகத்தின் கண்களால் முதுகுக்குப் பின் நடப்பதையும் உணர எனக்குத் தெரியும்.”

“எல்லாம் தெரிந்த உங்களுக்கு நீங்களே செய்கிற சில தவறுகள் மட்டும் ஏன் தெரியவில்லையோ? நேற்றுவரை தென்பாண்டி நாட்டின் படைகளைக் கட்டிக்காத்து அணி வகுத்தவன் நான். போருக்குப் பயிற்சி கொடுத்தவன் நான். இப்போது திடீரென்று படைகளை முன்னால் அனுப்பிவிட்டு என்னைத் தனியே நிறுத்தி அவமானப் படுத்துகிறீர்கள். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்கிறீர்கள். குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூறவேண்டும் என்கிறீர்கள். விசாரித்துத் தீர்ப்புக் கூறுமளவிற்கு நான் என்ன தப்புச் செய்திருக்கிறேனென்று எனக்கே தெரியவில்லை.” தலை குனிந்து நின்ற தளபதி வல்லாளதேவன் சற்றே நிமிர்ந்து அவரைக் கேட்டான்.