பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

651


நாடு முழுவதும் வெள்ளுரில் நடந்து கொண்டிருக்கும் போரின் முடிவு என்ன ஆகுமோ என்ற பயமும், கலவரமும் நிலவிக்கொண்டிருந்தன. நாட்டின் வடக்கு எல்லையில் மாபெரும் போர் நடந்துகொண்டிருப்பதன் அறிகுறியாக அங்கங்கே வளமிகுந்த நாஞ்சில் நாட்டு ஊர்கள் களையிழந்து கலகலப்புக் குன்றிக் காணப்பட்டன. பண்டங்கள் விலையேறி விட்டன. எங்கிருந்தாலும் இந்தப் போர்க் காலத்தில் குமார பாண்டியர் திரும்பி வந்துவிடுவாரென்ற நம்பிக்கை நாட்டு மக்கள் எல்லோருக்கும் இருந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிய தீய செய்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். - - -

எல்லாக் குழப்பங்களுக்கும் மனத்தை ஈடுகொடுக்க முடியாமல் அரண்மனை அந்தப்புரமே கதியென்று கிடந்தார் மகாராணி. கருணையும் அன்பும் நிறைந்து சாந்தம் தளும்பும் அவருடைய மனத்துக்கு மகாமண்டலேசுவரருக்கு இருந்தது போல் துன்பங்களை விழுங்கிவிட்டு நிமிர்ந்து நடக்கும் ஆற்றல் இல்லை. உணர்ச்சிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்து விடும் மெல்லிய பெண் மனம் அவருடையது. குமாரபாண்டியனை அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் தாங்கள் அவரைக் காணலாம் என்று மகாமண்டலேசுவரர் கூறிய சில வார்த்தைகள்தாம் மகாராணியின் உயிரைத் தாங்கிக் கொண்டிருந்தன. அதுவும் அன்று மாலை கோட்டாற்றுப் பண்டிதர் வந்து சென்றபின் மறுநாள் காலை துண்ட்ா மணிவிளக்கு அணைந்ததிலிருந்து மகாராணியின் மனம் நிம்மதியாகவே இல்லை. ஊமைக் குழப்பங்கள் மனத்தைச் செல்லரித்தன. குமாரபாண்டியனின் கப்பல் வந்ததும், தகவல் சொல்லி அனுப்புமாறு விழிஞத்தில் ஆள் நிறுத்தியிருந்தாலும் மகாராணியின் மனத்துக்கு உற்சாகமூட்டுவதற்காகத் தாமே அவரையும் அழைத்துக்கொண்டு விழிஞத்துக்குச் செல்லலாம் என்று மகாமண்டலேசுவரர் நினைத்தார். அதனால் தான் யாரும் அறியாமல் தளபதியைச் சிறைப்படுத்தி விட்டுத் தாம் மட்டும் அரண்மனைக்குப் புறப்பட்டார் அவர். -