பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கூறியபோதுதான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. அதன்பின் அந்தப் பயணத்தின்போது குழல்வாய்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. பேச்சில் தொடங்கிய பிணக்கு ஊடலாகி, ஊடல் பெருங் கோபமாக மாறியிருந்தது. பயணம் தொடங்கிய மூன்றாம் நாள் மாலை, “போகிற வழியில் இந்தக் கப்பலைச் செம்பவழத் தீவில் சிறிது நேரம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று நாராயணன் சேந்தனை அழைத்துக் கூறினான் இராசசிம்மன். ‘குமாரபாண்டியர் என்னை மன்னிக்கவேண்டும். செம்பவழத் தீவு கடந்துவிட்டது. அவசரமாக விழிஞத்தை அடைய வேண்டுமென்பதற்காகக் கப்பலை வேறு வழியாக விலக்கிச் செலுத்திக் கொண்டு வந்துவிட்டோம்” என்று கவலைப்படுவது போன்ற முகபாவத்தை வருவித்துக்கொண்டு சொன்னான் நாராயணன் சேந்தன்.

“நல்லது. அப்படியானால் விழிஞத்தை எப்போது அடையலாம்?” என்று தன் மனவேதனையைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான் இராசசிம்மன்.

“வழக்கமாக ஆகிற நாட்களைக் காட்டிலும் இரண்டு நாட்கள் முன்னதாகவே போய்விடலாம்” என்று சேந்தனிட மிருந்து பதில் வந்தது. குமாரபாண்டியன், சேந்தன், குழல்வாய்மொழி ஆகிய இவர்கள் மூவரும் இப்படி அவசரமாகக் கப்பலில் வந்து கொண்டிருந்த இதே சமயத்தில் இவர்களை எதிர்பார்த்து விழிஞத்தில் காத்திருந்தவர்களின் நிலை என்ன என்று இனிமேல் கவனிக்கலாம்.

மகாராணி, பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகிய எல்லோருடனும் விழிஞத்துக்குப் புறப்பட்டு வந்திருந்தார் மகாமண்டலேசுவரர். போர்க்களத்திலிருந்து வீரர்கள் எவரேனும் அவசரச் செய்தி கொண்டுவந்தால், அவர்கள் தம்மை விழிஞத்தில் வந்து சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டு அதன் பின்பே புறப்பட்டிருந்தார் அவர். கோட்டாற்றுப் பெரும்படைகளையெல்லாம் திரட்டி அனுப்பியிருப்பதால் உடனடியாகக் கவலைப்படும்படியான நிகழ்ச்சி எதுவும் போர்க்களத்தில் நடந்துவிடாது என்ற நம்பிக்கை

அவருக்கு உண்டாகியிருந்தது.