பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

65


திரும்பிப் பிரிந்து சென்றான் அவன். சுசீந்திரம் கோவிலில் இடையாற்று மங்கலம் நம்பியும் அவர் புதல்வி குழல்மொழியும் அவர்களோடு மூன்றாம் மனிதரான ஓர் இளந் துறவியும் நாராயணன் சேந்தனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, “சேந்தா! இப்போது நீ மகாராணியாரைப் பாதியில் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். நீ கூறியதிலிருந்து வானவன் மாதேவியாரை ஏதோ தீய சக்திகள் சூழ்வதாகத் தெரிகிறது. இப்போது நீ மீண்டும் பின் தொடர்ந்து செல். முடியுமானால் இன்றிரவு கோட்டையிலேயே யாரும் அறியாமல் தங்கியிருந்து கவனி, உடனே போ!” என்று அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டார் மகா மண்டலேசுவரர்.

நாராயணன் சேந்தன் மகாராணியாரும் பரிவாரங்களும் சென்ற நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் போகாமல் வேறொரு கிளைச்சாலை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அந்தக் கிளை வழி ஓரிடத்தில் நெடுந்துரத்துக்கு ஒரு பாதிரித் தோட்டத்துக்கு நடுவிலே புகுந்து சென்றது. குறுகலான அவ்வழியில் நாராயணன் சேந்தனின் புரவி மெல்லச் சென்றது. நெடிதுயர்ந்த பாதிரி மரக்கிளைக்கு இடையே வழியின் மேல் அங்கங்கே நிலவின் ஒளி பரவியது. சில இடங்களில் மரக்கிளைகளின் அடர்ந்த நிழல் பட்டு இடைவழி தெரியாமல் இருண்டாற் போலவும் இருந்தது.

ஒர் இடத்தில் பாதையோரமாக யாரோ இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்து மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருப் பதைத் துரத்தில் வரும்போதே அவனுடைய கூரிய கண்கள் பார்த்துவிட்டன. அதைப் பொருட்படுத்தாமல், ‘யாரோ வழிப் போக்கர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிக்கிறார்கள்’ என்று நினைத்துக் குதிரையை விட்டுக்கொண்டு போக முயன்றான்.

ஆனால் அவனுடைய குதிரை அந்த இடத்தை அடைந்ததும் சாலையோரத்து இருளில் உட்கார்ந்திருந்த அந்த மூன்று ஆட்களும் குபிரென்று எழுந்து பாய்ந்து மறித்தபோதுதான் நாராயணன் சேந்தன் அவர்களை