பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கண்டால் ஊக்கமும், உற்சாகமும் ஏற்படுமென்று கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் எழுதியிருக்கிறான்.”

‘மகாமண்டலேசுவரரே! இதில் மன்னிப்பதற்கு என்ன குற்றமிருக்கிறது! போர் செய்வதற்கும், தன் நாட்டைக் காப்பாற்றி முடிசூடிக் கொள்வதற்கும் தானே இவ்வளவு அரிய முயற்சி செய்து இராசசிம்மனை இலங்கையிலிருந்து அழைத்துவரச் செய்திருக்கிறீர்கள். மகனைக் கண்குளிரப் பார்த்துவிட்டேன். நெடுநாட்களாக என் நெஞ்சை வாட்டிக் பிழிந்து கொண்டிருந்த தாய்மைத் தாகத்தைத் தீர்த்துக்கொண்டேன். இனி அவன் போரை முடித்துக் கொண்டு வெற்றி வாகைசூடித் திரும்புகிறவரை எவ்வளவு காலமானாலும் காத்திருப்பேன். தயவு செய்த அதுவரை உங்கள் பெண்ணையும், ஆசிரியர் ம்கள் விலாசினியையும் என்னோடு அரண்மனையில் வைத்துக்கொள்ள இருவரும் இணங்க வேண்டும். சிறு வயதுப் பெண்கள் இருவர் உடனிருந்தால் எனக்கு என் கவலைகளை மறந்துவிட முடிகிறது” என்று மகாராணி முகத்தில் மலர்ச்சியோடு கூறினார்.

“மகாராணி கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா யாராவது? என் மகள் விலாசினியும், மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியும் தங்களோடு அரண்மனையில் இருப்பதைப் பெரும் பாக்கியமாக ஒப்புக் கொள்வார்க ளென்பதில் ஐயமில்லை” என்றார். அதங்கோட்டாசிரியர்.

குமாரபாண்டியன் தாயின் அருகிற் சென்றான். குழல்வாய்மொழியும், விலாசினியும் விலகி நின்றுகொண்டார்கள். மகாராணிக்குக் கண்கள் கலங்கின. “அம்மா! எனக்கு ஆசி கூறி விடையளியுங்கள். நான் வெற்றியோடு திரும்பி வருவேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்கள் மனத்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற ஆசைகளை நிறைவேற்றுவேன். வெற்றியோடு திரும்பியவுடன் இலங்கையிலிருந்து நம்முடைய சுந்தர முடியையும், பொற்சிம்மாசனத்தையும் வீர வாளையும் காசிய மன்னர் கொடுத்தனுப்பிவிடுவார். பின்பு எப்போதும் போல் இந்தத் தென் பாண்டிய மரபு வளர்ந்தோங்கச் செய்யும் பொறுப்பை