பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

679


மேற்கொள்வேன். மகாமண்டலேசுவரரும் நீங்களும் அவ்வப்போது எனக்குப் பயன்படும் அறிவுரைகளையெல்லாம் போர்க்களத்துக்குச் சொல்லி அனுப்பவேண்டும். சிறிதும் தயக்கமில்லாத நிறைமனத்தோடு கண்கலங்காமல் என்னை அனுப்புங்கள், அம்மா! அன்னையின் காலடியில் மண்டியிட்டு வணங்கினான் அவன்.

“போய் வா. வெறும் இராசசிம்மனாகத் திரும்பி வராதே! வெற்றி வீரன் இராசசிம்மனாக வாகை சூடி வா. பல்லூழிக் காலமாக இந்தத் தென்பாண்டி நாட்டைக் காத்துக் கொண்டு கடல் மருங்கே நின்று தவம் செய்யும் குமரித்தாய் உன்னைக் காத்து உனக்குத் துணை நின்று அருள்புரிவாள்."- கண்களில் நீர் பனிக்கத் தொண்டை கரகரத்துக் குரல் ஒலி மழுங்க இந்தச் சொற்கள் மகாராணியின் வாயிலிருந்து வெளிவந்தன. இந்த வார்த்தை செவியில் விழுந்த அதே சமயத்தில் அவன் பிடரியில் அன்னையின் கண்ணிர் முத்துக்கள் சில உதிர்ந்து சிதறின. இராசசிம்மன் எழுந்து மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான். -

“சுவாமி! ஈழ நாட்டுச் சேனை சக்கசேனாபதியின் தலைமையில் வந்து சேர்ந்தால், அதை வெள்ளுர்ப் போர்க்களத்துக்கு அனுப்பிவையுங்கள். நான் இப்போதே புறப்படுகிறேன்” என்று கூறி முடிக்குமுன்பே, “அதெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன்! நீ தாமதம் செய்யாமல் புறப்படு. இதோ இந்த வீரர்கள் உன்னை அழைத்துப்போகக் காத்திருக்கிறார்கள். நான் போர்க்களத்தில் இருக்கும் உனக்கு மிக முக்கியமான செய்தி ஏதாவது சொல்லி அனுப்ப வேண்டியிருந்தால் சேந்தனை அனுப்புவேன்! போய் வா... தோல்வியோடு திரும்பாமல் இருக்கத் தெய்வம் துணைபுரியட்டும்” என்று அவசரத்தோடு இடைமறித்துச் சொன்னார் மகாமண்டலேசுவரர். அவன் அதிகம் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாத மாதிரி அவசரப்படுத்தினார். ஆசிரியரையும், பவழக்கனிவாயரையும் வணங்கினான் அவன். “வெற்றியோடு திரும்பி வந்து தங்கள் தந்தை பராந்தக பாண்டியர் போல் பெரும் புகழ் பெற்று வாழுங்கள்” என்று வாழ்த்தினார்கள் அவர்கள். -