பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

682

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“என் ஒலையோடு ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதன் இங்கு வந்தானா?” என்று கேட்டார். அவர், “வரவில்லை” என்ற பதில் அவர்களிடமிருந்து கிடைத்தது. “சேந்தா! இன்னுமா உனக்குச் சந்தேகம்? என் மேல் கல்லெறிந்துவிட்டு ஓடியவர்கள் யார் என்று இப்போதுகூடவா உனக்குத் தெரியவில்லை” என்று சேந்தனிடம் காதருகில் மெல்லச் சொன்னார் மகாமண்டலேசுவரர்.

“புரிகிறது, சுவாமி கல்லெறிந்த கைகளை முறிக்க ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும்.”

மகாமண்டலேசுவரர் நகைத்தார். “அப்பனே! சூழ்ச்சி களைக் கடந்த நிலையில் இப்போது நான் நிற்கின்றேன். வா. இடையாற்றுமங்கலத்துக்குப் போகலாம். நீ எந்த நேரமும் எனக்கு அந்தரங்கமானவனல்லவா? புறப்படு” என்றார்.


17. குமுறும் உணர்ச்சிகள்

பிறரிடம் சேர்க்கவேண்டிய செல்வங்களை அபகரித்து ஒளித்து வைத்துக்கொண்டு வாழ்கிறவன்கூட நிம்மதியாக இருந்துவிட முடியும். ஆனால் பிறரிடம் சொல்லவேண்டிய உண்மையை மறைத்து வைத்துக்கொண்டு அப்படி நிம்மதியாக இருந்துவிட முடியுமா? உண்மை என்பது நெருப்பைப் போல் பரிசுத்தமானது. தன்னை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைச் சுட்டுக்கொண்டே இருக்கும் அது!

பகவதியின் மரணம் என்ற எதிர்பாராத உண்மைதான் மறைத்து வைக்கப்பட்ட உள்ளங்களைச் சுட்டுக்கொண்டே இருந்தது. குமாரபாண்டியனுக்கு எப்போதுமே அவனுடைய அன்னையைப்போல் நெகிழ்ந்து இளகிவிடும் மனம் வாய்த்திருந்தது. இந்த நெகிழ்ச்சியே அரசியல் வாழ்க்கையில் அவனுடைய பலவீனங்களுக்குக் காரணமாக இருக்கலாம். அரசியல் நூல்கள் அரசனின் இலக்கணமாகக் கூறும் ஆண்மையின் கடுமையும், தன் கீழ்நிலையை எண்ணித் தனது பகைமையை அழித்து உயரக் கருதும், வைரம் பாய்ந்த கொதிப்பும் ஆரம்பமுதல் அவனுக்கு இல்லாமலே போயின.