பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 883

தோற்றச் சாயலில் தந்தையைக் கொண்டிருந்த அவன், பண்பில் தாயைக்கொண்டு பிறந்திருந்தான். எதையும் மறைக்கத் தெரியாதவனாக யாரையும் கெடுக்க நினைக்காதவனாக இருந்தான் அவன். விரைவில் உணர்ச்சிகளுக்கு இலக்காகி அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் தன்மை அவனிடம் இருந்தது.

தங்கள் கப்பல் விழிஞத்தை அடைந்து கரையில் இறங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லித் தன் துயர உணர்ச்சிகளை எல்லோரோடும் கலந்து கொண்டுவிடவேண்டுமென்று துடித்தான் அவன். அவனோடு வந்த குழல்வாய்மொழியோ, சேந்தனோ, அந்த உண்மை தெரிந்திருந்தும் அவனைப்போல் அதை வெளியிடுவதற்குத் துடிக்கவில்லை. அதை அப்போது வெளியிடக் கூடாதென்றே நினைத்தனர் அவர்கள் இருவரும். மகாராணி முதலியவர்களிடம் பகவதியின் மரணத்தைப் பற்றிச் சொல்லி விடுவதற்குக் குமாரபாண்டியனின் வாய் துடிப்போடு முனைந்ததைக் கவனித்துவிட்டாள் குழல்வாய்மொழி. அதை சொல்லிவிடாமல் தடுக்கவேண்டும் என்ற குறிப்பைத் தன் கண் பார்வையாலேயே சேந்தனுக்குத் தெரிவித்தாள் அவள். சேந்தன் உடனே மகாமண்டலேசுவரருக்கு அந்தக் குறிப்பைத் தெரிவித்தான். மகாமண்டலேசுவரர் உடனே குமார பாண்டியனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போய், பகவதியின் மரணத்தைப் பற்றிய செய்தி யைத் தாம் சொல்லுமுன் வெளியிடக் கூடாதென்று வாக்குறுதி பெற்றுக்கொண்டுவிட்டார். அந்த ஒரு வாக்குறுதி மட்டுமன்று, தளபதி வல்லாளதேவனைக் கோட்டாற்றுப் படைக் கோட்டத்திலேயே தாம் சிறை வைத்துவிட்ட திடுக்கிடும் செய்தியையும் அவனிடம் தெரிவித்து, அதையும் வெளியிடக் கூடாதென்று மற்றொரு வாக்குறுதியும் பெற்றுக் கொண்டார். மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு எவராக இருந்தாலும், அத்தகைய நெருக்கடியான சமயத்தில் குமார பாண்டியனிட மிருந்து அந்த இரண்டு வாக்குறுதிகளையும் பெற்றுவிட

முடியாது. - - . -