பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/690

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் அவள், ஆனாலும் ஏதோ பெரிய கேடுகளெல்லாம் அந்த மறைக்கப்பட்ட உண்மை மூலம் வர இருப்பதுபோல் உண்டாகும் பீதி அவளை மீறி வளர்ந்தது. யாரிடமும் சொல்லாமல் அரண்மனையைவிட்டு இடையாற்று மங்கலத்திற்கு ஓடிப்போய்விடலாம் போலிருந்தது. ஒரு சமயம் மகாராணி அவளைக் கேட்டார்: “என்னோடு இருப்பதில் உனக்கு ஒரு கவலையும் இருக்கக் கூடாதம்மா! இந்த அரண்மனையை உங்கள் இடையாற்றுமங்கலம் மாளிகையைப்போல நினைத்துக்கொள். என்னை உன் தாய் மாதிரி எண்ணிக் கொள். வந்தது முதல் நீ திடீர் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறாய் போலிருக்கிறது. உன் தந்தையைப் பிரிந்து என்னோடு இங்கு வந்துவிட்டதால் வருத்தப்படுகிறாயா? இதற்கே இப்படி வருந்துகிற நீ அவ்வளவு நாட்கள் தந்தையைப் பிரிந்து இலங்கைவரை எப்படித்தான் போய் வந்தாயோ?”

மகாராணி இப்படிக் கேட்டபோது தன் உணர்ச்சிகள் அவருக்குத் தெரியுமாறு நடந்து கொண்டோமே என்று வெட்கப்பட்டாள் குழல்வாய்மொழி.

சிவிகையில் புறப்பட்டுத் தளபதியின் தங்கையைப் பற்றி விசாரித்து வருவதற்குக் கோட்டாறு சென்ற புவனமோகினி நள்ளிரவாகியும் அரண்மனை திரும்பவில்லை. மகாராணி என்னவோ, ஏதோ என நினைத்து மனங்கலங்கினார். மறுநாள் பொழுது விடிகிற நேரத்தில் பரபரப்பான நிலையில் அரண்மனைக்கு ஓடிவந்த புவனமோகினியைக் கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள்.


18. வெள்ளூர்ப் போர்க்களம்

வெள்ளுர்ப் போர்க்களத்தில் இருந்த பாண்டியப் பெரும்படையும், அதற்கு உதவியாக வந்திருந்த சேர நாட்டுப் படையும், குமாரபாண்டியனுடைய எதிர்பாராத திடீர் வருகையைக் கண்டு பெருமகிழ்ச்சி எய்தின. இளவரசனின் வரவு