பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

695


தவிர்க்கலாமே?” என்று சக்கசேனாபதி கேட்டபோது, அவருக்கு மறுமொழி கூறும் வகையறியாது தயங்கினான் அவன்.

“சக்கசேனாபதி! அதைப் பற்றி இப்போது உங்களிடம் பேசும் சக்தியற்றவனாக இருக்கிறேன் நான். ஆனால் நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டிய சமயம் வரும்போது அந்தச் செய்தியை உங்களிடம் சொல்வேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள்” என்று பதில் கூறியபோது அவரிடம் ஏதோ ஒரு துயரமான வேண்டுகோளைக் கேட்பது போன்றிருந்தது அவன் குரல்.

சக்கசேனாபதிக்கும் அவனுக்கும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்த அன்று இரவு நடுயாமத்தில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாண்டிப் படைகளின் பாசறைகள் இருந்த பகுதியில் திடீரென்று ஒரு பெருங் குழப்பம் உண்டாயிற்று. கூக்குரல்களும், கூட்டமுமாகச் சிலர் திடுதிடுவென ஓடுகிற ஒலியும், தீப்பந்த வெளிச்சமுமாகக் கலவரம் எழுந்தது. சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் எழுந்து அது என்னவென்று பார்ப்பதற்காகச் சென்றனர்.


19. ஊழிப் புன்னகை

மகாமண்டலேசுவரர் அந்த மாதிரித் தளர்ந்து பேசிச் சேந்தன் அதற்கு முன்பு கேட்டதில்லை. கம்பீரத்தின் சாயை குன்றி துயர அமைதியோடு கூடிய சாந்தம் நிலவுவதை அந்த முகமண்டலத்தில் அன்றுதான் கண்டான் அவன். புரிந்து கொள்ள முடியாத புதிர்த்தன்மை நிறைந்த அந்தக் கண்களில் ஏக்கம் படர்வதை முதல் முதலாகச் சேந்தன் பார்த்தான். நிமிர்ந்து அகன்று நீண்டு மேடிட்டுப் படர்ந்த அவருடைய நெற்றியில் மேதா கர்வம் மறைந்து சுருக்கங்கள் தெரிந்தன. சேந்தன் மனத்தில் அதையெல்லாம் பார்த்துக் காரணமற்ற பயங்கள் கிளர்ந்தன.

“சுவாமி! இன்று தங்களுடைய பேச்சும் தோற்றமும் இதற்கு முன்பு நான் காணாத விதத்தில் இருக்கின்றனவே! என் மனம்