பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

697


வேளானையும், இரண்டொரு காவல் வீரர்களையும் தவிர இடையாற்றுமங்கலம் மாளிகையில் வேறு யாரும் இல்லை.

“சேந்தா! இப்போது இந்த இடம் மயானம்போல் அமைதியாயில்லை?” என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே அவர் கேட்டார். அவன் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான். அந்தச் சமயத்தில் அம்பலவன் வேளான் வந்து அவர்களெதிரே வணங்கி நின்றான்.

“வேளான்! நீ உடனே அரண்மனைக்குப் புறப்பட்டுப் போ. அங்கே மகாராணியோடு குழல்வாய்மொழி தங்கியிருக்கிறாள். நான் அழைத்துவரச் சொன்னதாக உடனே அவளை அழைத்து வா” என்று மகாமண்டலேசுவரர் கட்டளையிட்டார். அவரே குழல்வாய்மொழியை மகாராணியோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு ஏன் இப்போது இவ்வளவு அவசரமாக அழைத்துவரச் சொல்கிறாரென்று விளங்காமல் சேந்தன் திகைத்தான். அவர் கட்டளை கிடைத்தவுடன் வேளான் புறப்பட்டு விட்டான். மகாமண்டலேசுவரர் சேந்தன் பின் தொடர, மாளிகைக்குள் போய் ஒவ்வோர் இடமாக அன்று தான் புதிதாகச் சுற்றிப் பார்ப்பவர்போல் சுற்றிப் பார்த்தார். நந்தவனத்துக்குப் போய் ஒவ்வொரு செடியாக ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கொடியாக நின்று நோக்கினார். அவருடைய நோக்கம் என்னவாக இருக்குமென்று சேந்தனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியாக இடையாற்றுமங்கலம் மாளிகையில் மேல்மாடத்து நிலா முற்றத்தில் உயர்ந்த இடத்தில் ஏறி நான்கு புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அப்போதும் மகாமண்டலேசுவரர் சிறு குழந்தை மாதிரி கண்கலங்கி நிற்பதைச் சேந்தன் கண்டான். அவனால் பொறுக்க முடியவில்லை. சகலத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அந்த அரிய மலை கண்கலங்கி நிற்பதைக் காணப் பொறுக்காமல், “சுவாமி! மறுபடியும் இப்படிக் கேட்பதற்காக என்னை மன்னியுங்கள். உங்கள் செயல்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று அழுகையின் சாயை பதிந்த குரலில் கேட்டான் சேந்தன். மெதுவாகத் திரும்பி அவன் முகத்தைப் பார்த்து முன் போலவே சிரித்தார் அவர். “சேந்தா!