பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/709

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

707


உண்டாகாததும் நம் எண்ணங்களின் அடிப்படையைப் பொறுத்தது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாது. வெளியில் இவ்வளவு பெரிய கலவரம் எழவேண்டுமானால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் வேண்டும்.” -

“காரணம் இருக்கிறதோ, இல்லையோ? இவையொன்றும் நல்ல காலத்துக்கு அறிகுறியாகத் தோன்றவில்லை. மனக்கலக்கம் தான் அதிகமாகிறது” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் மகாராணி. அந்தச் சமயத்தில் குழல்வாய்மொழியைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றிருந்த விலாசினி, திரும்பி வந்தாள்.

“மகாராணி ! இடையாற்றுமங்கலத்து நங்கையைக் காணவில்லை. அநேகமாக அரண்மனையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிப் பார்த்துவிட்டேன். எங்கே போனாளென்று தெரியவில்லை’ என்று திரும்பி வந்து விலாசினி கூறியபோது எல்லாரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

“உள்ளே சென்று வருகிறேன் என்று போனவள் அதற்குள் எங்கே சென்றுவிட முடியும்? நன்றாகத் தேடிப்பாருங்கள். அரண்மனைக்குள்ளேதான் எங்காவது இருப்பாள்!” என்றார் அதங்கோட்டாசிரியர். அவர்கள் இவ்வாறு திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனையின் பிரதான வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் காக்கும் காவலர்களில் ஒருவன் அங்கு வந்து வணங்கி நின்றான். அவன் மகாராணியை நோக்கிக் கூறினான்;

“சற்றுமுன் இடையாற்றுமங்கலத்திலிருந்து அம்பலவன் வேளான் என்ற படகோட்டி மகாமண்டலேசுவரரின் புதல்வியாரைச் சந்தித்து ஏதோ முக்கியமான செய்தி தெரிவிக்க வேண்டுமென அவசரமாக வந்தான்! நான் அவனை உள்ளே அனுப்புவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரின் திருப்புதல்வியாரே அந்தப் பக்கமாக வந்து விட்டார்கள். சந்தித்துப் பேசிக்கொண்டதும் அவசரமாக இடையாற்றுமங்கலம் போவதாகத் தங்களிடம் கூறிவிடுமாறு என்னிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள் இடையாற்றுமங்கலத்து நங்கை” என்று தெரிவித்துவிட்டுக் காவலன் போய்விட்டான்.