பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

709


“மகாராணி! காலையில் புவனமோகினி வந்து கூறியவற்றில் பொய் எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலகம் விளைவிப்பதற்குப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். கழற்கால் மாறனார் முதலிய கூற்றத்தலைவர்களும், தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், இந்தக் கலகக் கூட்டத்துக்கு முதன்மையாளர்களாகியிருக்கிறார்கள். தளபதியின் தங்கை ஈழ நாட்டில் இறந்தது உண்மைதானாம். அதற்கும், தளபதி போர்க் களத்துக்குப் போய்த் தலைமை தாங்கிப் போர் செய்ய முடியாமற்போனதற்கும், மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிதான் காரணமென்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்” என்று அவர்கள் கூறினார்கள்.

“பொய்! முழுப் பொய்! நான் இவற்றை நம்பவேமாட்டேன். வேண்டுமென்றே அவருக்கு எதிராக யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள். மகாமண்டலேசுவரரையே நேரில் சந்தித்துக் கேட்டாலொழிய நான் நம்பமாட்டேன். அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்” என்று ஆவேசமுற்றவர்போல் கூச்சலிட்டார் மகாராணி, மற்றவர்கள் அவரிடம் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

மகாராணியே மீண்டும் பேசினார். “நான் இப்போதே இடையாற்றுமங்கலத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன். அவரைப் பார்த்துக் கேட்கிறேன். அப்போதாவது உண்மை தெரிகிறதா, இல்லையா, என்று பார்க்கிறேன்.” -

“எங்கும் கலகக்காரர்கள் ஆயுதங்களோடு திரிகிற இச்சமயத்தில் தாங்கள் தனியே இடையாற்றுமங்கலம் புறப்படுவது கூடாது” என்று எல்லோருடைய குரல்களும் ஒன்றாக எழுந்து ஒலித்து மகாராணியைத் தடுத்தன. மகாராணி அதைக் கேட்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்ததும், புவனமோகினியை உடன் அழைத்துக்கொண்டு சிவிகையில் இடையாற்றுமங்கலம் புறப்படுவதற்கு உறுதி செய்துகொண்டு விட்டார் அவர் அந்தப் பிடிவாதத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் ஆசிரியரும், பவழக்கனிவாயரும், விலாசினியும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்களையெல்லாம் இதே