பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அவனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறவர்களைப் போலக் கால்வாய் வழியாக உட்புறம் வந்து கரையேறிய அந்த மூவரும் அவன் ஏறி உட்கார்ந்திருந்த அதே மகிழ மரத்தை நோக்கி நடந்து வந்தனர். நிலா ஒளி தன்னை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்ற திகில் நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்டது. நிலா முற்றத்துச் சுவரின் நிழலும் மகிழ மரத்தின் அடர்த்தியும் அவனுக்கு அபயமளித்தன. மிக அருகில் மரத்தின் அடர்த்தியும் கீழே அம் மூவரும் வந்து நின்றபோது அவனால் அவர்களை நன்றாகப் பார்ப்பதற்கு முடிந்தது. பீமசேனர்களைப் போல் மூவரும் பருத்த ஆகிருதியுடையவர்கள். ஒருவன் முகத்திலும், கை கால்களிலும் சிராய்ந்து இரத்தக் காயங்கள் தென்பட்டன. அந்த ஆள் இன்னாரென்று நாராயணன் சேந்தன் தெரிந்து கொண்டு விட்டான். கன்னியாகுமரியில் தளபதி வல்லாளதேவனை வழியில் மடக்கி எதிர்த்து அவனிடம் நன்றாக அடிபட்டுப் பாறையிடுக்கில் விழுந்து மூர்ச்சை அடைந்தவனே அவன்.

கீழே அவர்கள் வந்து நின்ற நிலையும், சுற்றிலும் ஏதோ தேடுகிறவர்களைப் போல அவர்கள் பார்த்த விதமும் மரக்கிளையில் பதுங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தன் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கின. மகிழ மரத்துப் பொந்தில் நெருப்புக் கங்கு போன்ற விழிகளோடு உட்கார்ந்து கொண்டிருந்த கோட்டான் ஒன்று குரூரமாகக் கத்தியது. மேற்புறம் நிலா முற்றத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்டிய ஒலியும், இனிய பாடற் குரலும் அந்தக் கோட்டானின் அலறலில் கலந்து விகாரமடைந்தன.

நாராயணன் சேந்தன் பாதங்களை மரக் கொம்பில் அழுத்திக் கிளையைப் பற்றியிருந்த கைகளின் பிடியை இறுக்கினான். அவன் உட்கார்ந்திருந்த கிளை குலுங்கியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களின் கவனம் ஒரு கணம் அந்தச் சிறிய சலனத்தால் கவரப்பட்டது. அவர்கள் தங்களுக்குள் இரகசியமாக ஏதோ பேசிக்கொள்ளத்