பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/726

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


“விட்டுத்தள்ளுங்கள்! உங்களுடைய ஈழத்துப்படைகளும், கரவந்தபுரத்து வீரர்களும், சேரப் படைகளும் இருக்கின்றன. தென்பாண்டிப் படைகளில் சில பத்தி வீரர்கள் போரைப் புறக்கணித்துவிட்டு ஓடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து விடாது!”

“இப்படி அலட்சியமாகப் பேசுவதுதான் தவறு ! ஆயிரமிருந்தாலும் சொந்தப் படைகளைப் பிரிந்து போகவிடுவது கூடாது. நீங்கள் எந்த வகையில் முயற்சி செய்வீர்களோ எனக்குத் தெரியாது. தளபதியையும் ஆபத்துதவிகள் தலைவனையும், அவர் களோடு சேர்ந்திருக்கும் கழற்கால் மாறனார் முதலியவர்களையும் நம்முடன் தழுவிக்கொள்ளவேண்டும். நம்முடைய இந்த உட்பகையை எதிர்தரப்பினர் தெரிந்துகொள்ள நேர்ந்தால் பின் இரண்டே நாட் போரில் அவர்கள் நம்மை வென்றுவிட முடியும்.”

“நீங்கள் சொல்வதெல்லாம் நியாயந்தான்! ஆனால் அவர்களைச் சமாதானப்படுத்தித் தழுவிக்கொள்வது எளிதில் முடிகிற காரியமல்லவே?”

“இளவரசே! நீங்களே நேரில் போனால் இரண்டு நல்ல காரியங்கள் முடியும். தளபதி வெறிபிடித்துப் போய் இடையாற்றுமங்கலத்தைத் தாக்கச் சென்றிருக்கிறானாம். அதனால் மகாமண்டலேசுவரரும், நீங்களும் சேர்ந்தே தளபதியைச் சந்தித்துச் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்து வந்துவிடலாம். நீங்கள், உங்களுடைய அன்னையார், மகாமண்டலேசுவரர் மூவருமாகச் சேர்ந்து சமாதானப் படுத்துகிறபோது தளபதி ஒப்புக்கொள்வான்.”

“நான் போய் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஒருவராகவே இரண்டு நாளைக்குப் போரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் போய்வர இரண்டு நாட்களாகலாம்.” -

“ஒருவாறு இரண்டு நாட்கள் சமாளித்துக்கொள்ள முடியும், நாம் படைகளின் கைதளர்ந்து பின்வாங்க நேர்ந்தாலும் மூன்றாம் நாள் காலை நீங்கள் தளபதியோடும் படைகளோடும் வரவில்லையானால் முடிவுக்கு நான் பொறுப்பில்லை.”

“பயங்கரமான நிபந்தனை விதிக்கிறீர்கள், சக்கசேனாபதி!"