பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

71


தொடங்கவே நாராயணன் சேந்தன் மறைந்திருந்தபடியே அவற்றை உற்றுக் கேட்டான்.

“ஏண்டா செம்பியன், இதென்ன வேடிக்கை! இதுவரை ஆடாமல் அசையாமல் இருந்த மரக்கிளை ஏன் இப்படித் திடீரென்று குலுங்குகிறது ?”-மூவரில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து இப்படிக் கேட்கவும், மற்ற இருவரும் குறும்புத்தனமாகச் சிரித்தனர்.

“முத்தரையா! மேலே நிலா முற்றத்தில் தான் மகாராணியார் இருக்கிறார் போலிருக்கிறது! இதோ இந்த ஒலிகளைக் கவனித்தாயா?” என்று, முதலில் கேட்டவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமலே, வேறொரு கேள்வியை எழுப்பினான் இன்னொருவன்.

“இரும்பொறை! அப்படியானால் நம்முடைய முயற்சியை இங்கே தொடர்ந்து செய்தால் என்ன? நமக்கு முன்னால் குதிரையில் வந்த அந்தக் குட்டைத் தடியன்கூட இங்கே தான் எங்கேயாவது இருப்பான். கன்னியாகுமரிக் கோவிலில் நிறைவேறாத நமது எண்ணம் இங்கே நிறைவேறினாலும் நிறைவேறலாம். இந்த மகிழ மரத்துக் கிளை வழியாகவே நாம் நிலா முற்றத்தில் ஏறிக் குதிக்கமுடியுமென்று தோன்றுகிறது."இப்படி அதுவரை பேசாமல் நின்றிருந்த மூன்றாமவன் கூறியபோது மரக்கிளையில் பதுங்கியவாறே இவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனின் உடல் வெட வெடவென்று ஆடி நடுங்கியது. குட்டைத் தடியன் என்று கீழே நின்று பேசியவன் குறிப்பிட்டது தன்னைத்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது.

அந்தச் சிவப்புத் தலைப்பாகை ஒற்றர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட பேச்சிலிருந்து அவர்கள் மூவருடைய பெயரையும் கூட அவன் ஒருவாறு தெரிந்து கொண்டான். செம்பியன், முத்தரையன், இரும்பொறை-கீழே நிற்கும் அவர்களுடைய இந்தப் பெயர்கள் பாண்டி நாட்டுப் பெயர்களாகவே தோன்றவில்லை. அவர்களுடைய பேச்சின் உட்கருத்தை உணர்ந்தபோது, ‘இரண்டாவது முறையாக