பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அவள் அதை வாங்கிக்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பதுபோல் மகாராணியின் முகத்தைப் பார்த்தாள்.

“விலாசினி! இந்த ஒலையில் எழுதியிருக்கும் பாட்டைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா?” என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஒலையிலிருந்த பாட்டை ஒருமுறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக்கொண்டே விலாசினி, ‘மகாராணி ! இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா? பகவதி இங்கே தங்கியிருக்கும்போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே?” என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணிர் அரும்பியது மகாராணியின் கண்களில். ‘இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும்போல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி நான் இப்போது சொல்லப்போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மன வேதனை தாங்க முடியாமல் அரண்மனை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக்கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா? அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிரா விட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும்? அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலக மிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம்? மகாமண்டலேசுவரர் இறந்துபோய் விட்டார் என்று கேட்கும்போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே! நேற்று நாமெல்லோரும் பேசிக்கொண்டிருந்தபோது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்றுமங்கலத்துக்கு ஒடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ?