பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73;

அந்தத் துயரச்செய்தி மனத்தில் உறைந்து நாவுக்குப் பேசும் ஆற்றல் உண்டாகச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அவனால் அதை நம்புவதற்கே முடியவில்லை.

“அம்மா! மகாமண்டலேசுவரர் இறந்துவிட்டார் என்று உண்மையாகவே சொல்கிறீர்களா, அல்லது என்னைச் சோதனை புரிகிறீர்களா?”

“சோதனை நான் செய்யவில்லையப்பா! உன்னையும் என்னையும், இந்த தேசத்தையும் விதி சோதனை செய்கிறது. தெய்வம் சோதனை செய்கிறது. நம்பிக்கைகள் சோதனை செய்கின்றன” என்று சொல்லிக் கொண்டே குலுங்கக் குலுங்க அழுதார் மகாராணி.

“மகாராணி மனங் குழம்பிப் போயிருக்கிறார்கள், நடந்தவற்றை நாங்கள் சொல்கிறோம்’ என்று அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் அங்கு வந்தார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்தபோது அவனும் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். அவனுக்கும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

‘அம்மா! விழிஞத்தில் இறங்கியதும் பகவதியின் மரணத்தை யாருக்கும் கூறவேண்டாமென்று மகாமண்டலேசுவரர்தான் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று அவர்தான் சொன்னாரம்மா! தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர்மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை, அம்மா! இங்கேதான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலாமென்று நான் ஓடி