பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகம். தேவி, இந்தத் திருமுக ஒலையை நீங்கள் படிக்குமுன் நான் இவ்வுலக வாழ்வினின்றும் விடைபெற்றுச் சென்றுவிடுவேன். என்னுடைய மரணத்துக்காக நீங்களோ, குமாரபாண்டியரோ சற்றேனும் வருந்தவேண்டியதில்லை. இந்த விநாடிக்குப்பின் இனி ஒருகணம் வாழ்ந்தாலும் நானோ என் அறிவோ எதிலும் வெற்றிபெற முடியாது. தீபத்தில் எண்ணெய் வற்றியதும் திரியும், சுடருமே அழிந்துவிடுகிற மாதிரி நல்வினைப் பயன் நீங்கியதும் எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும் அறிவும், முயற்சியும் பயன்படாது! அருள் கலக்காத முரட்டு அறிவுக்கு என்றாவது ஒருநாள் இந்தத் தோல்வி ஏற்படத்தான் செய்யும். தளபதி வல்லாளதேவன் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலே என்னென்னவோ செய்து விட்டான். அதைப் போல் இறுதியில் சில சமயம் நானும் அவனைப் புரிந்துகொள்ளாமல் என்னென்னவோ செய்துவிட்டேன். அறிவும் வீரமும் பகைத்துக்கொண்டதால் ஒரு நாட்டுக்கு எவ்வளவு கெடுதல்கள்? எப்போதாவது முடிந்தால் ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நீங்கள் தளபதிக்குத் தெளிவு செய்துவிடவேண்டும். அவன் தங்கையின் மரணத்துக்கு நான் காரணமில்லை என்பதுதான் நீங்கள் அவனுக்குத் தெளிவு செய்யவேண்டிய மெய். பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியாமல் இலட்சிய பங்கமும் மானக்கேடும் ஏற்பட்டால் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது நம் தமிழ்க்குலத்து மரபு. நானும் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோயில் குறட்டில் அமர்ந்து வடக்கு நோக்கி இந்த வாழ்வை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து விட்டேன். சாவு தீர்மானப்படிதான் வரவேண்டுமென்பதில்லையே? என் தீர்மானத்தை முந்திக்கொண்டு வந்தாலும் அதை வரவேற்க நான் தயங்கமாட்டேன்.

“இந்தக் கடைசி நேரத்தில் யாரும், எப்போதும், எதிர்பாராத ஒரு காரியத்தை நான் செய்யப்போகிறேன். இத்தனைக் காலமாக என்னிடம் உண்மையாக ஊழியம் செய்த நாராயணன் சேந்தனுக்கு என் மகள் குழல்வாய்மொழியை மணம் முடித்துக் கொடுத்துவிடப் போகிறேன். இதைவிடப் பெரிய நன்றி அவனுக்கு நான் வேறென்ன செய்ய முடியும்?.”