பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

739

குழல்வாய்மொழியைப் பார்த்துவிட்டு நடந்தான் இராசசிம்மன். அவன் காவலை கெட்டிப் படுத்துவதற்காக பராந்தகப் பெருவாயிலுக்குச் சென்றதும், சேந்தனையும், குழல்வாய்மொழியையும் தழுவி அழைத்துக்கொண்டு தமது அந்தரங்க அறைக்குச் சென்றார் மகாராணி புவனமோகினியைக் கூப்பிட்டு, “புவன மோகினி ! இந்த அரண்மனைக் கருவூலத்திலுள்ள விலை மதிப் பற்ற உயர்ந்த ஆடையணிகலன்களையெல்லாம் தேர்ந்தெடுத்து இந்தப் பெண்ணை அலங்கரித்து வா” என்று சொல்லிக் குழல்வாய்மொழியை அவளுடன் ஆவலோடு அனுப்பினார்.

சேந்தன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவனையும் பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்து மணக்கோலம் பூண்டுவரச் செய்தார். பவழக்கனிவாயர், ஆசிரியர், விலாசினி எல்லோரையும் சூழ இருக்கச் செய்து குழல்வாய்மொழியையும் சேந்தனையும் மாலை மாற்றிக் கொள்ளுமாறு மணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எல்லோருமாகச் சேர்ந்து மணமக்களுக்கு மங்கல வாழ்த்துக் கூறினார்கள். அந்தச் சமயத்தில் இராசசிம்மன் வேகமாகவும், பரபரப்பாகவும் அங்கே ஓடி வந்தான். அவன் முகத்தில் பயமும், குழப்பமும் தென்பட்டன.

“அம்மா! பராந்தகப் பெருவாயில் தகர்ந்து விட்டது. கலகக்காரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். இப்போதிருக்கிற வெறியையும், ஆவேசத்தையும் பார்த்தால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது போலிருக்கிறது. “மகாமண்டலேசுவரரின் மகளையும் ஒற்றனையும் கொன்று பழிவாங்குவோம்” என்று கூச்சலிட்டுக் கொண்டு கொலை வெறியோடு ஓடி வருகிறார்கள். ஒரு விநாடிகூட இனிமேல் இங்கே தாமதிப்பதற்கில்லை. எப்படியாவது இவர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கலவரம் மிகுந்த குரலில் பதற்றத்தோடு கூறினான் குமாரபாண்டியன். குழல்வாய்மொழியை மணக்கோலத்தில் கண்டபோது அந்தக் குழம்பிய சூழ்நிலையிலும் ஏதோ சில மெல்லிய உணர்ச்சிகள் அவன் உள்ளத்தைக் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவன் தன் மனத்தையும் கண்களையும் அடக்கிக் கொண்டான். ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளித் தள்ளினான். எங்கோ