பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

77


“வல்லாளதேவா! இதோ நிற்கிறானே நாராயணன் சேந்தன். இவனை உனக்குத் தெரியுமல்லவா ? இவன் யாரிடம் பொய் சொன்னாலும் என்னிடம் பொய் சொல்ல மாட்டான்.”

இடையாற்று மங்கலம் நம்பி சொற்களை ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னார். இனியும் அவருக்கு அந்த ஒலையை எடுத்துக் காட்டாமல் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்று உணர்ந்துகொண்ட வல்லாளதேவன் இடுப்புக் கச்சையில் மறைத்து வைத்திருந்த ஒலையை வெளியே எடுத்தான்.

“மகாமண்டலேசுவரர் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு காரணத்துக்காக நான் இந்த ஒலையைக் கைப்பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமலிருப்பது நல்லதென்று மறைத்தேன், வேறு விதத்தில் தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது” என்று பவ்வியமான குரலில் சொல்லிக்கொண்டே மடங்கிச் சுருண்டிருந்த அந்த ஒலையை எடுத்து அவர் கையில் கொடுத்தான்.

“ஆ! இந்த ஒலைதான். என்று அதைப் பார்த்ததும் அருகில் அடக்கமாக நின்றுகொண்டிருந்த நாராயணன் சேந்தன் வியந்து கூவினான். அந்த ஒலை, அதில் இடப்பட்டிருந்த புலி, பனை ஆகிய முத்திரைகள் இவற்றையெல்லாம் பார்த்த பின்பும் வியப்போ, அதிர்ச்சியோ அடையாத நிதானமான முகக் குறிப்புடன் அதைப் படித்தார் இடையாற்று மங்கலம் நம்பி. அந்த ஒலை அவர் பெயருக்குத்தான் எழுதப்பட்டிருந்தது. அதில் அடங்கியிருந்த செய்தியும் சாதாரணமான செய்தியல்ல.

“மகாமண்டலேசுவரரான புறத்தாய நாட்டு நாஞ்சில் மருங்கூர்க் கூற்றத்து இடையாற்று மங்கலம் நம்பி அவர்கள் திருச் சமூகத்துக்கு, வடதிசைப் பெருமன்னரான சோழன் கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளுர்க் குறுநில மன்னனும், அரசூருடையானும் ஆகிய மூவரும் எழுதிக் கொண்ட திருமுகம். இந்தத் திருமுக ஒலை தங்கள் கையை