பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

81

காட்டிலும் உன் சாமர்த்தியம், பொறுப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்கு வலிமை வாய்ந்த சக்தி ஒன்று மகாராணி வானவன் மாதேவியை அல்லும், பகலும், அனவரதமும் இடைவிடாமல் காத்து வருகிறதென்பது உனக்குத் தெரியுமா ?”

அவருடைய இந்தச் சொற்களிலிருந்து ஏதோ ஒரு கூர்மையான முள் தன் மனத்தில் தைத்து விட்டது போலிருந்தது வல்லாளதேவனுக்கு, அவர் தன்னையும் தன் சக்தியையும் ஏளனம் செய்யவேண்டும் என்பதற்காக அப்படிப் பேசுகிறாரா, அல்லது மறைமுகமாகக் குத்திக் காட்டுகிறாரா என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினான் அவன். குபிரென்று அவன் மனத்தில் ஆத்திரம் புகைந்தது. ஒரே ஒரு விநாடிக்குள் உணர்ச்சி வசப்பட்டு அவரை எதிர்த்துப் பேசிவிடத் துணிந்துவிட்டான், வல்லாளதேவன்.

அவன் நிலையைப் பார்த்துப் புரிந்து கொண்ட அவர் உள்ளுறச் சிரித்துக்கொண்டே, “வல்லாளதேவா! உனக்கு வருகிற கோபத்தைப் பார்த்தால் இப்போதே வாளை உருவிக் கொண்டு என்மேல் பாய்ந்து விடுவாய் என்று தோன்றுகிறது. பொறு! ஆத்திரப்படாதே! மகாராணியாரின் நலத்திலும் நாஞ்சில் நாட்டின் அமைதியிலும் மிக அதிகமான பொறுப்பு எனக்கும் இருக்கிறது” என்று நிதானமாகக் கூறினார்.

“மகாமண்டலேசுவரரின் ஆற்றலையோ, ஆணைகளையோ அடியேன் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை. ஆனாலும் அடியேனிடம் அவர் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வாரென்றும் எதிர்பார்க்கவில்லை. நாளை நாஞ்சில் நாட்டு மகாசபையைக் கூட்டவேண்டுமென்று மகாராணியார் தெரிவிக்கச் சொன்னதனால்தான் இங்கு வந்தேன். இல்லையானால் இங்கு வந்து தங்களுக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்க மாட்டேன்”, தளபதி அமைதியாகப் பேச முயன்றாலும் வேகமாக வந்த கோபத்தை வலுவில் அடக்கிய