பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

83

எனக்குத் தெரியாமலே இவருடைய ஒற்றனான இந்தக் குட்டையன் மறைந்திருந்து கண்காணித்திருக்கிறான். நானோ மகாமண்டலேசுவரருக்கு ஒன்றும் தெரிந்திருக்கக் காரண மில்லை என்று பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஒரு கோடியிலுள்ள இந்தத் தீவின் மாளிகையில் இருந்து கொண்டு நாஞ்சில் நாட்டு மூலை முடுக்குகளில் நடப்பதைக்கூட ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்!’ பயமும் மலைப்பும் கலந்த இதுபோன்ற திகைப்பூட்டும் நினைவுகள்தாம் வல்லாள தேவனின் மனத்தில் கிளர்ந்தன.

“சரி அப்படியானால் நாளைக்கு மகாசபை கூட்டுவதைப் பற்றிக் கூறுங்கள். அதைத் தெரிந்து கொண்டு நான் இங்கிருந்து விடை பெற்றுக் கொள்ளுகிறேன். அரண்மனையில் மகாராணியார் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் காத்திருப்பார்” என்று அவன் இப்படிக் கேட்டதும் அவர் மறுபடியும் அவனை நோக்கிச் சிரித்தார். அவருடைய அந்தச் சிரிப்புக்களில் அப்படி என்னதான் மறைந்து கொண்டிருக்கின்றன? ஒவ்வொரு சிரிப்புக்கும் ஓர் உள்ளர்த்தம் இருப்பதுபோல் அல்லவா அவனுக்குத் தோன்றியது!

“சேந்தா! தளபதி திரும்பிப் போவதற்கு எவ்வளவு அவசரப்படுகிறார் பார்த்தாயா? அவருக்கு இங்கே இருப்பதற்கே பயமாக இருக்கிறது. நாமெல்லாம் சிங்கம், புலி, கரடிகள் என்று நினைக்கிறார் போலும்” என்று தளபதிக்குப் பதில் சொல்லாமல் சேந்தனை நோக்கிக் கூறுபவர் போலக் கூறினார் மகாமண்டலேசுவரர்.

“சுவாமீ! இவர் போக வேண்டுமென்றாலும் இப்போது போக முடியாது. என்னை இக்கரைக்குக் கொண்டுவந்து விட்டபின் அம்பலவன் வேளான் தோணியைத் துறையில் கட்டிவிட்டு, உறங்கப் போய்விட்டான். இனி நாளைக்கு வைகறையில்தான் தோணி போகும்” என்று சேந்தன் கூறினான்.

“கேட்டுக் கொண்டாயா, தளபதி! உன்னை இங்கே யாரும் விழுங்கிவிட மாட்டார்கள். இன்றிரவு இங்கே