பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

87


வடபகுதியை வெற்றி கொண்டோம். சிறு பிள்ளையாகிய பாண்டிய இளவரசன் இராசசிம்மன் நமக்கு அஞ்சிக் கடல் கடந்த நாட்டுக்கு ஓடி விட்டான். அவனைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் காலஞ்சென்ற பராந்தக பாண்டியனின் கோப்பெருந்தேவியும், இராசசிம்மனின் தாயுமான வானவன் மாதேவி தென்பாண்டி நாட்டில் போய் வலிமைமிக்க ஆதரவுகளோடு வாழ்ந்து வருகிறாள். அதனால் நமக்கு ஓரளவு நிம்மதிக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மூவரும் நன்கு உணர்வோம்” என்று சோழன் பேச்சைத் தொடங்கி வைத்தான். அது வரையில் ஏதோ சொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருந்த அரசூருடையான் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு முற்பட்டான்.

“நண்பர்களே! தென்பாண்டி நாட்டையும் அங்கே மகாராணி வானவன் மாதேவிக்குக் கிடைத்திருக்கும் பலமான ஆதரவையும் சாதாரணமாக மதிப்பிட்டு விட்டு நாம் பேசமால் இருந்து விட முடியாது. அமர பதவி அடைந்து விட்ட பராந்தகனின் வீரம் உங்களுக்குத் தெரியாததன்று. அந்த வழிமுறையில் இரண்டு கொழுந்துகள் எஞ்சியிருக்கின்றன. மகாராணியையும், குமார பாண்டியனையும் தான் இப்படிக் குறிப்பிடுகிறேன். மதி நுட்டமும் அறிவாற்றலும் உடையவரான தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் சிந்தனையும், நாஞ்சில் நாட்டுப் பெரும்படைத் தளபதியான வல்லாளதேவனின் வீரமும், ஒன்று சேர்ந்தால் பின்பு நம்மையே கதிகலங்கச் செய்து விடுவார்கள்.”

பேசும் போது அரசூருடையான் கண்களில் உறுதியான ஒளி மின்னியது. குரலில் அழுத்தம் தொனித்தது. “அன்புக்குரிய சோழ வேந்தரே! அரசூருடைய சென்னிப் பேரரசரே! நீங்கள் இருவரும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டே கழிப்பதால் என்ன பயன்? செயலை நிறைவேற்ற வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு வழி சொல்லுங்கள்."