பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பாண்டிமாதேவி / முதல் பாகம்


இப்படி மெளனமாக உட்கார்ந்திருப்பதற்காகவா நான் சிரமப்பட்டு இந்த ஒலைகளை எழுதினேன்? எனக்கு விடை வேண்டும்!”

உள்ளங் கைகளைத் தட்டிப் புடைத்து மீசை துடிதுடிக்க ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் முன்கோபியான கொடும்பாளுர் மன்னன்.

“கொடும்பாளூர் மன்னரே ! கவலைப்படாதீர்கள். எதற்காக ஆத்திரமடைகிறீர்கள்? உங்களுடைய யோசனையை எதற்காகவேனும், எப்பொழுதேனும் நாங்கள் மறுத்திருக்கிறோமா? உங்கள் திட்டப்படியே செய்வோம்” என்று பரகேசரி கூறியபின்புதான் கொடும்பாளுரானின் முகத்தில் தோன்றிய கடுகடுப்பும், ஆத்திரமும் மறைந்தன.

“மிகவும் நல்லது ! உங்கள் திட்டப்படியே யாவும் நடைபெறட்டும்! நானும் பரகேசரியும் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். இப்போது மேலே செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள். குமார பாண்டியனையும், வானவன் மாதேவியையும் ஒழிப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்? அரசூருடையானின் இந்தக் கேள்வி சற்றுத் தணித்திருந்த கொடும்பாளூர் மன்னனின் கோபத்தை உடனே மீண்டும் கிளப்பி விட்டுவிடும் போலிருந்தது.

“என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னை மட்டும் பார்த்துக் கேட்கிறீர்களே; யோசனையை நான் சொல்லி விட்டேன். இனிமேல் செய்ய வேண்டியதை மூன்று பேர்களுமாகச் சேர்ந்துதான் செய்யவேண்டும். அரசூருடையார் என்னை மட்டும் நீங்கள் நீங்கள் என்று சுட்டிக்காட்டிப் பேசுவதில் பயனில்லை!” என்று சீறி விழுவதுபோல் இரைந்தான் கொடும்பாளுர் மன்னன்.

அதன் பின்னர் அவனைச் சுய நிலைக்குக் கொண்டு வந்து பேசி முடிப்பதற்குள் ஒரு மத யானையை அடக்குவதற்குப் படவேண்டிய அவ்வளவு சிரமங்களையும் அநுபவித்து விட்டனர் சோழன் பரகேசரியும் அரசூருடையானும்.