பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. வஞ்சினம் வெடித்தது

இந்த முறை சோழனுக்குப் பாண்டி நாட்டின் மேல் ஆசை விழுந்தது. ஆனால் அவன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப்போல ஆராயாமல் செயலிற் புக விரும்பவில்லை. அரசன் புதியவனாக வந்திருந்தாலும் பழம் படைகள் மதுரையில் மிகுதியாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். ‘எவ்வளவு படைகள் இருந்தாலும் தக்க தலைவன் இருந்தாலன்றிப் படையின் ஆற்றல் பயன்படாது. இளமைப் பருவமுடைய நெடுஞ்செழியனுக்கு என்ன அநுபவம் இருக்கிறது? ஏதோ பைத்தியக்காரத்தனமாக மாந்தரஞ் சேரல் ஆராயாமல் சென்று அகப்பட்டுக் கொண்டான். எப்படியோ தப்பி வந்துவிட்டான். தக்கபடி படைப் பலத்தைக் கூட்டிக்கொண்டு சென்று எதிர்த்தால் தடையின்றிப் பாண்டி நாட்டை அடிப்படுத்திவிடலாம்.’-இந்த நெறியிலே சென்றன, அவன் எனணங்கள்.

சோழ அரசனிடம் படை இருந்தது. ஆனால் அது போதாதென்று தோன்றியது. எத்தனைக் கெத்தனை மிகுதியான படைகளைச் சேர்த்துக்கொள்ள முடியுமோ அத்தனைக்கத்தனை வெற்றி உறுதி யென்று தேர்ந்து, அதற்கு ஆகும் வழி என்னவென்று ஆராய்ந்தான். தான் மாத்திரம் படையைப் பெருக்கிக்கொண்டால் போதாதென்று நினைத்தான். மற்ற நாட்டு மன்னர்களையும் துணையாகப் பெற்றால் பாண்டியனை