பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பாண்டியன் நெடுஞ்செழியன்

பேரரசை எளிதிலே குலைத்துவிடலாம் என்று நான் நினைக்கவில்லை. பலருடைய துணைவலி இருந்தால் அது இயலும்” என்றான்.

சோழன் முதலில் இருங்கோவேள்மானிடம் சென்றான். மிகப் பழங் காலத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வேளிர்களில் ஒருவனுடைய வழி வந்தவன் அவன். அவனுடைய குல முதல்வன் ஒரு முனிவரைக் காப்பாற்றும் பொருட்டுப் புலியோடு, பொருது அதனைக் கொன்றான். அதனால் அவனுக்குப் புலிகடிமால் என்ற சிறப்புப் பெயர் வந்தது. அப்பெயரை அவன் வழி வந்தவர்களுக்கும் சார்த்தி வழங்குவது மரபாகி விட்டது. துவார சமுத்திரம் என்னும் ஊரைத் துவரை என்று தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். புலிகடிமால் மரபை ஹொய்ஸால வம்சம் என்று இப்போது சரித்திர ஆசிரியர்கள் குறிக்கிறார்கள். வீரம் செறிந்த மரபு அது.

இருங்கோவேள்மானிடம் சோழனும் பிறரும் சென்று பேசி அவனையும் தம் கட்சியில் சேர்த்துக் கொண்டனர். தகடூரை ஆண்ட எழினியும் அவர்களுக்குத் துணையானான்.

முடியுடை மன்னராகிய சோழனும் சேரனும், திதியன், பொருநன், எருமையூரன், இருங்கோவேள்மான், எழினி என்னும் ஐம்பெரு வேளிரும் ஒன்றுபட்டுப் பாண்டியனை எதிர்த்து வென்று பாண்டி நாட்டைத் தமக்குள்ளே பங்கு போட்டுக்கொள்ளத் திட்டமிட்டனர். அவரவர்கள் தம்மால் இயன்ற அளவுக்குப் படையைக் கூட்டுவதாக உறுதி பூண்டனர்.