பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பாண்டியன் நெடுஞ்செழியன்

வில்லை. போர்ப்பறை காதில் விழுந்ததோ இல்லையோ, தன் குலத்துக்குரிய வேப்பந் தளிரைச் சூடிக்கொண்டான், நாட்டை முற்றுகையிட்டிருக்கும் பகைவரோடு பொரப் புகுவார் அணிகிற மரபுப்படி உழிஞைக் கொடியையும் அணிந்து கொண்டான். வீர முரசு ஆர்ப்ப, அந்த ஏழு பேரையும் அடக்குவேன் என்று புறப்பட்டு விட்டானே! இந்தப் பருவத்தில் இத்துணைத் துணிவு உண்டானது ஆச்சரியப்படக் கூடியதல்லவா?”

“ஆம், ஆம்” என்று இப்போது தலையசைத்தார் மற்றொரு புலவர்.

பாண்டி நாட்டின் வடவெல்லையிலே போர் மூண்டது. அங்கேயே பகைவர்களை எதிர்த்து அழிப்பது என்று பாண்டிய மன்னன் புறப்பட்டுவிட்டான்.

பகைவர் ஏழு பேர்கள்; பகைப் படைகளும் ஏழு. ஆயினும் ஏழு வகையில் செயலாற்றலாமா? எருமையூரன் படைக்கும் சோழநாட்டுப் படைக்கும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வளவோ வேறுபாடுகள். முன்பு கூடியறியாதவர்கள் அவர்கள். அத்தகையவர்கள் எப்படி ஒத்துப் போர் செய்ய முடியும்? சோழ நாட்டு வேளிர்களில் இன்னும் சிலரைத் துணைக்கு அழைத்திருக்கலாம்; நெடுஞ் சேய்மையிலுள்ள இருங்கோவேள்மானிடம் போயிருக்க வேண்டாம்; எருமையூரனை நாடியிருக்க வேண்டாம். எல்லாம் பட்ட பிறகு தானே தெரிகின்றன? ஒவ்வோர் ஊர்ப் படையும் ஒவ்வொரு வகையில் போரிடுவதாக இருந்தால் போரில் எப்படி ஒருமித்துத் தாக்க இயலும்?

இந்தக் குறைபாடும் பாண்டியனது படைக்குப் பலமாக முடிந்தது. இயற்கையாகவே பெருவிறல்