பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையாலங்கானத்துப் பெரும் போர்

37

தளிரையும் உழிஞையையும் அணிந்துகொண்டான். கையில் காப்பு அணிந்து விளையாடினவன் அதைக் கழற்றிவிட்டு வில்லை எடுத்துக்கொண்டான். தேரில் சிங்கக் குட்டிபோல நின்றான். ‘இவன் யார்! விளையாடிக்கொண்டிருந்த அவனா!’ என்று நாங்கள் எங்கள் கண்களையே நம்பவில்லை. அவன் வாழட்டும், அவன் கண்ணி வாழட்டும் என்று போற்றினோம். எங்கள் கண்ணேறு படக்கூடாதல்லவா? இன்னும் குழந்தைப் பருவத்துக்குரிய ஐம்படைத் தாலியைக் கழற்றவில்லை. பாலை விட்டுவிட்டுச் சோறே உண்ணும் பழக்கமும் வரவில்லை. அதற்குள் படையெடுத்து வந்த பகைஞரை எதிர்க்கப் புறப்பட்டுவிட்டான். அவர்களுடைய படைப் பெருமையைக் கண்டு வியக்கவும் இல்லை; அதை அலட்சியம் செய்யவும் இல்லை. அவரைத் தக்கபடி தாக்கி எலியைப் பொறியிலே அகப்படுத்துவதுபோலச் சுற்றிக்கொண்டான். வெற்றியாரவாரம் வானத்தில் எதிரொலி செய்யுமாறு அவர்களை மடக்கினான்; நிலத்தைக் கவ்வும்படி செய்தான். அதைக் கண்டு நாடே அதிசயத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அவனோ இதற்காக அளவற்ற மகிழ்ச்சியடையவும் இல்லை; தன் பெருமையைச் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அவன் வீரத்தைச் சொல்வதா? உள்ளத் திண்மையைச் சொல்வதா? பண்பின் சிறப்பைச் சொல்வதா?”[1]

இவ்வாறு பாடினார் இடைக்குன்றூர் கிழார். ஒரு பாட்டோடு நின்றாரா? மேலும் மேலும் பாடினார்.

“அந்தப் பைத்தியக்காரர்களுடைய அறிவை என்னவென்று சொல்வது! புலி புறப்பட்டால் அதன்


  1. புறநானூறு.77