பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரில் ஊக்கம்

43

அளித்த காணிக்கைகளைச் சொல்வதா? குடிமக்கள் தங்கள் அன்புக்கு அறிகுறியாக அரிய பண்டங்களைக் கையுறையாகக் கொணர்ந்து அளித்த அன்பைக் கணக்கெடுக்க முடியுமா? அவர்கள் அளித்ததற்குமேல் அரசன் பல்வகைப் பொருள்களை அவர்களுக்கு வழங்கிய சிறப்பைத்தான் அறுதியிட்டுச் சொல்ல இயலுமா?

திருமணத்தில் அணங்கினர் நடனமிட்டனர்; அவர்களுடன் திருமகளும் களிக்கூத்தாடினள். புலவர்கள் புகழ்பாடிப் பாராட்டிப் பரிசுகளை மலையெனப் பெற்று உவகைக் கடலில் மூழ்கினர்; கலைமகள் குதுகலித்தாள். சான்றோர்கள் தெய்வத் திருவிழாவிலே கலந்து கொண்டது போன்ற இன்பத்தை அடைந்தார்கள்; தெய்வத் திருக்கோயில்களில் சிறப்பாக விழாக்கள் நடைபெற்றன.

மன்னனுடைய குலப் பெருமையை முதியோர் பாராட்டினார்கள்; அவனுடைய வீரச் சிறப்பைப் படைத் தலைவர்கள் புகழ்ந்தார்கள்; அவனுடைய வள்ளன்மையைப் புலவர்கள் கவிதையில் வைத்துப் போற்றினார்கள்; அவனுடைய கலைநுகர் திறத்தைக் கலைஞர்கள் எடுத்துரைத்துக் களிகூர்ந்தனர்; அறிவுச் சிறப்பை அமைச்சர் எடுத்துரைத்தனர்; அன்பின் மிகுதியைக் குடிமக்கள் பலபடியாகப் பாராட்டினர். குழந்தையும் கிழவனும், ஆணும் பெண்ணும், உள்நாட்டாரும் புற நாட்டாரும் தங்கள் தங்களுக்குத் தோற்றிய வகையில், அரசனைத் தம் அன்புக்குரியவன் என்பதை உணர்ந்து தெளிந்து, மனத்தால் போற்றியும் வாக்கால் புகழ்ந்தும் பெருமிதம் கொண்டார்கள்.