பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

பாண்டியன் நெடுஞ்செழியன்

கும் என்பதை முன்பே உணர்ந்தவன்தான் நெடுஞ்செழியன். அதனை இதுகாறும் மறந்திருந்தான். இப்போது நினைவு வரப்பெற்று ஆவனவற்றைச் செய்தான்.

புலவர்கள் அரசனுடைய மனமாற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் தமக்குள்ளே அந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்கள். சிலருக்கு ஒரு வகையான அச்சம் எழுந்தது.

“நீர்நிலைகளைச் செப்பம் செய்த பிறகு, தனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லாமையால் மீட்டும் போரிலே அரசன் உள்ளத்தைச் செலுத்தினால் என் செய்வது?” என்றார் ஒரு புலவர்.

“அரசனுக்கா வேலை இல்லை? ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்புடையவனுக்கே அல்லும் பகலும் அறுபது நாழிகையும் வேலை இருக்கும்போது, ஒரு நாட்டை ஆளுகிற மன்னனுக்கு, அதுவும் பரந்து விரிந்த இப்பாண்டிப் பெருநாட்டை ஆளுகிற சக்கரவர்த்திக்கு, வேலையா இல்லை? வேளாண்மை, வியாபாரம், தொழில்கள், கலைகள் ஆகியவை வளர்ச்சியடைய வழி துறைகளை வகுக்கலாம். ஊர்தோறும் உள்ள ஆலயங்களைச் செப்பஞ் செய்யலாம். பழுது பட்ட அறச்சாலைகளைத் திருத்தியமைக்கலாம். அறங்கள் பல செய்யலாம். குடிமக்களுக்கு என்ன குறை உண்டென்று விசாரித்துப் போக்க முற்படலாம். நீதித் துறையைக் கவனிக்கலாம். அறங்கூறவையத்தில் உள்ள சான்றோர்களோடு பழகி அவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டுச் செய்யவேண்டியவற்றைச் செய்யலாம். மறுமைக்குரிய புண்ணியச் செயல்களைச்