பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதனார் படைத்த பாட்டு

65

செய்யலாம்” என்று வேறு ஒரு புலவர் வரிசையாக அடுக்கினார்.

“அரசன் மனம் கடமையை உணர ஓரளவு தலைப்பட்டிருக்கிறது. இந்தச் சமயம் பார்த்து அவனுக்குப் போரின் தீமையையும் செய்ய வேண்டிய செயல்களின் இன்றியமையாமையையும் வற்புறுத்திக்கொண்டே வர வேண்டும். அவன் உள்ளம் இந்தத் துறையில் நன்கு ஈடுபட்டுவிட்டால் மீண்டும் மாறாது. அதற்கு ஏற்ற வகையில், அவன் உள்ளம் கொள்ள, சொல்லும் ஆற்றல் உள்ளவர்கள் சொல்ல வேண்டும்” என்று மற்றொரு புலவர் சொன்னார்.

“இப்போது இங்கே உள்ள புலவர்களுக்குள் அறிவாலும் ஆண்டாலும் முதிர்ந்தவர் மாங்குடி மருதனாரே. அரசனுக்கும் அவரிடத்தில் நன்மதிப்பு இருக்கிறது. எப்படி வளைத்தால் வளையும் என்பதை அவர் நன்கு அறிவார். திசை திரும்பிய மன்னனுடைய சிந்தனையை அப்படியே இடையீடின்றிச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்துவிட வேண்டும்” என்று ஒருவர் இயம்பினார். மற்றப் புலவர்களும் மருதனாரை, ஏதேனும் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர். “அரசன் ஆக்க வேலைகளில் முனைந்தால் நாடு முன்னேறும். அறமும், வீட்டு நெறியும் அவன் உள்ளத்தில் இடம் பெற்றால் பாண்டி நாடு இந்திர லோகமாகிவிடும்” என்றார்கள்.

மாங்குடி மருதனாரும் இந்த வகையில் சிந்தனை செய்தவரே. அவர்கள் ஒருமுகமாகத் தம் தலையில் ஏற்றிய பொறுப்பை உதறுவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு செய்யும் ஆற்றல் இல்லாதவராக