பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பாண்டியன் நெடுஞ்செழியன்


“பரம்பரை பெரியதுதான். ஆனால் அது ஒன்றே போதுமா? வித்து நல்லதாகவும் உரமுடையதாகவும் இருந்தாலும் நிலமும் நீரும் பொருந்தினால்தான் நன்கு விளையும். அரசர்கள் சிறப்பதும் தாழ்வதும் பெரும்பாலும் உடன் இருக்கும் அமைச்சர்களைப் பொறுத்து நிற்கும். இளைஞனாகிய மன்னனுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தேர்ந்து நாடுவதற்கு அநுபவம் ஏது?”

“புதிய அமைச்சர்கள் சிலரே வருவார்கள். நாட்டின் நன்மையையே கருத்திற் கொண்டு அரசனுக்கு உறுதுணையாக நின்ற பழைய அமைச்சர்கள் இருக்கிறார்களே; அவர்கள் இதுகாறும் நடந்தபடியே அரசியலை ஒழுங்க்ாக நடத்த வழி வகுப்பார்கள் அல்லவா?”

“எல்லாம் போகப் போகத் தெரியும். நாம் நல்லதையே நினைப்போம். ஆண்டவனை வேண்டுவோம். அரசனை வாழ்த்துவோம்.”

மதுரை மாநகரில் ஒரு வீட்டில் இப்படி இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள். அதுகாறும் மதுரையை ஆண்டிருந்த பாண்டியன் உயிர் நீத்தான். அவனுடைய ஒரே மகனாகிய நெடுஞ்செழியன் அரசு கட்டில் ஏறினான். அப்போது அவன் இளம்பிள்ளையாக இருந்தான். கைக் குழந்தையாக இருந்தாலும் அவனுக்கே அரசுரிமை செல்வது மரபாதலால் அமைச்சரும் சான்றோரும் அவனுக்கு முடி சூட்டினார்கள்.

முடி சூட்டு விழா மிகச் சிறப்பாகவே நடைபெற்றது. பாண்டியர் குலத்தில் வரும் மன்னர்களுக்கு