பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரைக் காஞ்சி

75

எழ, மழைபோல அம்புகளைத் தூவி, குதிரைகள் புழுதி எழுப்பச் சங்கு முழங்கக் கொம்பு ஒலிக்க, அப் பகைவரை வென்று கொன்று அவர் நாடுகளை அழித்து மதில்களைக் கைக்கொண்டு அவருக்குத் துணையாக வந்தவரையும் வலியழித்து வீரம் காட்டுதலின், நின் பகைவர்கள் நின் ஏவலைக் கேட்டு நடக்கிறார்கள். மற்ற, மண்டலங்களையும் நின்னுடையனவாகக் கொண்டு அரசியல் பிழையாமல் அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழியே தவறாமல் ஒழுகி, வளர்பிறைபோல நின் கொற்றம் மேலும் மேலும் சிறப்பதாகுக! தேய்மதியைப்போல நின் பகைவர் ஆக்கங்கள் தேய்வனவாகுக!” என்று பாண்டியனை வாழ்த்துகிறார்.

நெடுஞ்செழியன் தேவலோகத்தையும் அமுத பானத்தையும் பெறுவதாக இருப்பினும் பொய்யை மேற்கொள்ளாமல் மெய்யையே கடைப்பிடிக்கிறவன். உலகத்தில் யார் எதிர்த்தாலும், தேவரே எதிரிகளாக வந்தாலும் பகைவர்களுக்கு அஞ்சமாட்டான். புதையலாக உள்ள பெரு நிதி கிடைத்தாலும் பழியை விரும்ப மாட்டான். பிறருக்கு நிதிகளைக் கொடுக்கும் நெஞ்சம் உடையவன்; புகழையே விரும்புபவன்.

இந்த இயல்புகளை எடுத்துக் கூறிய புலவர், “அத்தகைய சிறப்பியல்புகளை உடையவனே, நின் முன்னால் இருக்கும் இந்த விரிவான போகப் பொருள்களுக்கும் நினக்கும் என்ன தொடர்பு? பெரிய கருத்து ஒன்றைச் சொல்லப்போகிறேன். அதைக் கேட்பாயாக, நின் துன்பம் கெடுவதாகுக! நின் புகழ் கெடாமல் நிலைபெறுவதாகுக!” என்று வாழ்த்திவிட்டுக் காஞ்சித் திணையின் பொருளாகிய நிலையாமையைச் சொல்ல வருகிறார்.