பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படிப்பட்ட சிறுகாப்பிய நலன்களை விவரித்துள்ளதுடன், பாண்டியன் பரிசின் தலைமைக் காவிய மாந்தர்கள், துரோகியான எதிர்த்தலைவன், துணைக்காவிய மாந்தர், காவிய நடை, காவியத்தில் படிமங்கள், காவியம் உணர்த்தும் உண்மைகள் முதலான தலைப்புக்களில் நூலாசிரியர் புரட்சிக் கவிஞரின் படைப்பு நலன் விளங்க ஆய்வு செய்துள்ளார், புரட்சிக் கவிஞரின் தமிழ் நெஞ்சம், புலமை நலம், கொள்கை உறுதி, அஞ்சாமை, பகுத்தறிவுக் குறிக்கோள் முதலானவற்றை,மதிப்பீட்டாளர் ஆங்காங்கே பாராட்டி உரைப்பாராயினும், சில நிகழ்ச்சிகளை விவரிக்கும் இடத்துத் தம் உள்ளத்தில் பதிந்த உணர்வினை வெளியிடுவதைக் காண முடிகிறது. எதிர்பாராத முத்தத்தில் வரும் காதலர்கள் சந்திக்க நேருவதை "ஊழ் கூட்டுவிப்பதால்” (பக்கம்-17) சந்திக்க நேரிடுகின்றது என்பது புரட்சிக் கவிஞரின் உள்ளக்கிடக்கைக்கு ஒவ்வாது. நரிக்கண்ணன் அன்னத்தின் வாளுக்கு இரையாகின்றான் என்பதைக் கூறுமிடத்து, அன்னையையும் அத்தனையும் கொன்றவன், அவர்தம் அன்புச் செல்வியாலே மாள நேர்வது "விதியின் ஒரு பெரு விளையாட்டு’ (பக்கம்-64 என்பதும் புரட்சிக் கவிஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு உடன்பாடு ஆகாதது. புரட்சிக் கவிஞர் அமைதியான முறையினால் சமூகத்தை மாற்ற முடியாது என்னும் கருத்துடையராய்ப் புரட்சி நோக்கில் வன்முறையில் நம்பிக்கை ஊட்டுகின்றார் என்பதைக் கூறி, காந்தி வழியில் அமைதி காத்திடும் நோக்குடன் நடைபெற்ற விடுதலைப் புரட்சியை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். காந்தியடிகள்தான் அகிம்சைவாதியே தவிர, ஆகஸ்டு புரட்சி அம்முறையில் நடைபெற்றதல்ல என்பது வரலாறு. மேலும் "கையாலாகாத, கவைக்குதவாத இம்முறை செயலற்றுப் போன பிறகு இறைவனின் அவதாரக் கொள்கை பிறக்கின்றது. அறம் தாழ்ந்து மறம் தலைதூக்கி நிற்கும்போது, நல்லோரைக் காப்பதற்கும் அல்லோரை அழிப்பதற்கும் நான் யுகந்தொறும் அவதரிக்கிறேன் என்பது கீதை வாக்கியம்” (பக்கம்-74) என்று ஆசிரியர் உரைத்திருப்பது அவரது உள்ளத்து - ix -