பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய நடை 109 பாவேந்தர் தம்முடைய பாண்டியன் பரிசி"ல் எண்சீர் விருத்த யாப்பைக் கையாண்டுள்ளார். முதன்முதலாக பாண்டியன் பரிசு உரைநடையால் ஆக்க எண்ணியதாகவும், பின்னர் அது மிகப்பெரிய நூலாக வளரும் என்று கருதி ஏறக்குறைய நானூறு எண்சீர் விருத்தத்தால் எழுதிமுடித்ததாகவும் அவரே கூறுகின்றார். தொடக்க நிலைப் படிப்பாளரும் செய்யுளின் பொருளைப் புரிந்து கொண்டால் அதுவே தமக்கு மகிழ்ச்சி தருவதாகும் என்றும், எளியநடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையையும் தமிழின் பயனையும் தமிழர்க்கு விளக்க முடியும் என்ற அதிரடிக் கொள்கையையுடையவர் பாவேந்தர் என்பதை நாம் அறிதல் வேண்டும். ஒரே நடையில் படிப்பவர்கட்கு ஒருவித சோர்வு (Boredom) உண்டாகாமலிருக்கும் பண்பை அவரது எளியநடை நயமான சொற்றொடர்கள், பல விசித்திரமான உவமைகள், இடையிடையே கையாளப்பெறும் உவமைகள் செய்கின்றன என்பதைக் காவியத்தைப் படிப்பவர்கள் நன்கு அறிவார்கள். இவற்றைச் சற்று விரிவாகக் காண முயல்வோம். - உவமை உள்ளக் கருத்தைத் தெள்ளத் தெளியப் படிப்பவர், கேட்பவர் மனத்தில் பசுமரத்தானிபோல் பதிய வைப்பதற்கு உவமை உதவி புரிகின்றது. "உவமையைக் கவிதையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகக் கருதினார் தொல்காப்பியர். பிற்காலத்தவரோ இதை அணியாக, ஆபரணமாகக் கருதினர். உவமை அணி ஒன்றுதான் நம் வாழ்வோடு ஒன்றிக் கலந்து இணைந்து நிற்கின்றது. பண்டிதர் முதல் பாமரர் வரை உவமையோடு பேசுவதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணலாம்”. உவமை இல்லாத இலக்கியம் உப்பில்லாப் பண்டம் போன்றதாகும் என்பர். கவிஞர்களின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் கவிதைப் படைப்பிற்கும் உரைகல்லாக அமைகின்றது உவமை. புதியபுதிய உவமைகளை அமைப்பதில் பாவேந்தருக்கு நிகர் பாவேந்தரே. உவமைகளினால் சிறந்து விளங்குகின்றது "பாண்டியன் பரிசு”.