பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் - 1 பாண்டியன் பரிசு வரலாறு

“சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காப்பியமாகின்றது. “பாண்டியன் பரிசு” என்ற சிறுகாவியம் “பாண்டியன் பரிசு’ என்ற ஆட்சி உரிமையைக் கொண்ட பேழையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. நாம் வாழுங் காலம் குடியரசுக் காலம். அரச குடும்பத்துக் கதையைச் சாதாரண மக்கள் குடும்பத்தைச் சார்ந்த கவிஞர் ஒருவர் காவியமாக வார்க்கின்றார். அரச குடும்பத்தைச் சார்ந்த நங்கையொருத்தியைச் சாதாரண மக்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் - அதுவும் திருடர் தலைவனின் மகன் - மணக்கச் செய்து கற்பனைக் கதையில் புரட்சியை உருவாக்கி - காவியத்தைப் படைப்பதால், குடியாட்சிக் காலத்தில் முடியாட்சிக்கதையாவதிலும் ஒரு புரட்சி; அக்கதையைக் காவியமாக்குவதிலும் ஒரு புரட்சி. ஆகவே "பாண்டியன் பரிசும்” ஒரு புரட்சிக் காவியமாக அமைகின்றது.

“பாண்டியன் பரிசு” பற்றிய வரலாற்றைக் காண்போம்.

பாழடைந்த இருள்வீட்டில் விளக்கு, வானப் பனிப்புகையில் எழுந்தகதிர், அன்னம் என்பாள்! வாழ ஒரு பாண்டியனார் பரிசு வேண்டி வாடுகின்றாள் நாள்பலவும் வறிதேயாக

என்பது வேழ மன்னனின் பேச்சு. கதிர்நாட்டு அரசன் மகள் அன்னம் அடைய இருக்கும் எதிர்கால வாழ்வும் ஆட்சியும் திருமணமும்

1.இயல் 59:1- பக்.111