பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 2 பாவேந்தரின் காவியங்கள் “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது மக்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு ஆண்டு நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமல் நடத்துதல் வேண்டும்” - இவ்வாறு பாரதியார் தாம் படைத்த பாஞ்சாலி சபதத்தின் நூன்முகத்தில் எழுதுகின்றார். "பாஞ்சாலி சபதமும் அவர்தம் நோக்கத்தை நூற்றுக்கு நூறு விழுக்காடு நிறைவேற்றுவதாக அமைகின்றது. தம் குருநாதரின் கருத்தையொட்டியே அவர் தாசரான பாவேந்தரும் தமது “பாண்டியன் பரிசு” என்ற சிறு காவியத்தின் நூல் முகத்தில் “முதலில் உரைநடையால் இக்கதையை ஆக்கினேன்; மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும் எனத் தோன்றவே, ஏறக்குறைய நானூறு எண்சீர் விருத்தங்களால் எழுதி முடித்தேன். தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் இச்செய்யுட்களின் பொருளை எனின் - அதுதான் எனக்கு மகிழ்ச்சியூட்டுவது! எளிய நடை “ஒன்றாலேயே’ தமிழின் மேன்மையைத் தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை” என்று எழுதுகின்றார். இந்த நோக்கம் முழுமையாக நிறைவேறும் போக்கில்தான் இவர் இயற்றிய காவியங்கள் அமைகின்றன. இவர்தம் காவியப் படைப்புகள்: (1) சஞ்சீவி பர்வதத்தின் சாரல் (2) புரட்சிக் கவி (3) எதிர்பாராத முத்தம் (4) தமிழச்சியின் கத்தி (5) குறிஞ்சித் திட்டு (6) பாண்டியன் பரிசு. இவற்றைத் தவிர வேறு சில சிறு நாடகக் காவியங்களும் உள்ளன. அவை ஈண்டு எடுத்துக்கொள்ளப்பெறவில்லை. முதல் ஐந்து காவியங்களின் கதைச் சுருக்கம் முதலில் தரப்பெறுகின்றது. ஆறாவது காவியம் விரிவாக மதிப்பீடு செய்யப் பெறுகின்றது.