பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின்காவியங்கள் 13 நடத்தையை நேரில் அறிய வேண்டுமென்று கன்னிமாடத்தருகே மறைந்து காத்திருந்து “உதாரன் எழில் மங்கைக்குக் கைலாகு கொடுத்ததும் காதல் உரையாடல் நிகழ்த்தியதும், முத்தம் விளைத்த நடைமுறையையும்” நேரில் காண்கின்றான். கடுகடுக்கின்றான். உதாரனைச் சிறையிடுகின்றான். இச்செய்தி ஊரெங்கும் காட்டுத் தீபோல் பரவுகின்றது. அரசனுக்கும் கவிஞனுக்கும் இடையே நடைபெறும் உரையாடலை நான்கு பாடல்களில் வருணிக்கின்றார் கவிஞர். கவிஞனுக்குக் கொலை தண்டனை விதிக்கப்பெறுகின்றது. இந்நிலையில்- அமுதவல்லி இடையில் பிரவேசித்து முழங்குகின்றாள். “இல்லை உனக்கு அதிகாரம். கவிஞன்மீது பிழை இல்லை. ஒருவனும் ஒருத்தியுமாய் மனம் உவந்திடில் பிழை ஏது? அரச சாதி, பிற சாதி என்ற வேறுபாடு உண்டோ ? என் மனம் காதலனைச் சென்று இழுத்ததனால்தான் அவன் இணங்கினான். ஆதலால் அவன்மீது பிழை இல்லை. அதனால் என்னைத் தண்டித்தல்தான் முறை. ஆனால் மன்னனின் ஒரே மகள் நான், என்னை வருத்திட நினக்கு அதிகாரம் இல்லை! இதனை ஊர்மக்கள் முன்னர்தான் உரைத்தல் கடன்!” என்று வேகமாக ஒடிக் கொலைஞர் பிடியிலிருந்த கவிஞனை-தனது ஆருயிரை - மென்மலர்க்கரத்தாலே சென்று மீட்கின்றாள் தன் தாட்டிகத்தால், சினந்து எழுந்த அரசன், “இந்தத் துட்டச் சிறுக்கியைக் காவற்சிறையில் அடைப்பீர். அந்தக் கவிஞனை ஊர் மக்கள் எதிரில் கொலை புரியக் கூட்டிச் செல்வீர்” என்று ஆணையிடுகின்றான். அமைச்சன் குறுக்கிட்டு ‘அரசே, இது நீதி அன்று. மங்கையின் தண்டனையை நீக்கி யருள்க’ என்கின்றான். உடனே அமுதவல்லி குறுக்கிட்டு, “காதலனைக் கொலைக் களத்திற்கு அனுப்பி விட்டு கன்னி எனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட அமைச்சரே, உங்கள் நீதி நன்று! காதலன் இறந்தால் என் உயிர் நிலைத்திடும் என்று நினைத்துவிட்டீர் செத்தால் இருவரும் சாதல் வேண்டும். தவிர்ந்திடில் இருவருமே தவிர்தல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை மன்னன் வாய் ஒதட்டும். உயிர் எமக்கு வெல்லம் அல்ல” என்கின்றாள்.