பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 4 தலைமைக் காவிய மாந்தர்கள் காவிய ஆராய்ச்சியில் காவிய மாந்தர்களின் பண்பு நலன்கள் பற்றி மேனாட்டுத் திறனாய்வாளர் நன்கு ஆராய்வர். காவிய மாந்தர்களைப் படைப்பதிலும், அவர்கட்கு முக்கிய பங்கினைத் தருவதிலும் படைப்பாளனுக்கு இருக்கும் ஆற்றலைப் பொறுத்தே காவிய வெற்றி அடைய முடியும் என்பர். ஆகவே, காவிய மாந்தர்கள் படைப்பு, காவியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. காவியத் தன்மை ஊட்டுவதில் காவிய மாந்தர் படைப்பிற்குச் சிறந்த இடம் உண்டு. காவியத்தில் தலைமையான இடம் பெறுவோரைத் தலைமைக் காவிய மாந்தர்கள் என்றும், அவ்வாறு அமையாதோரைத் துணைக் காவிய மாந்தர்கள் என்றும் வகைப்படுத்திப் பேசுவர் திறனாய்வாளர்கள். காவியத்தில் காவிய மாந்தர்களை நுழைத்து நடமாடவிடுவதும் அவரைக் காவியத்திலிருந்து விலக்குவதும் காவியப் புலவனின் தனித்திறமையைப் பொறுத்தே அமையும். ஒரு காவியத்தின் நிறைவும் பொலிவும் அதில் போற்றப்பெறும் தலைமைக் காவிய மாந்தர்களின் பெருமையில்தான் அடங்கியுள்ளது என்பது ஆன்றோர் கருத்தாகும். தலைமைக் காவிய மாந்தர்களைச் சுற்றிச் சுற்றி நிகழ்ச்சிகள் அமையும்; துணைக் காவிய மாந்தர்களும் அவர்களைச்சுற்றியே வளைய வளைய வருவர். காவியத் தலைவர்கள் குறிக்கோள் நாயகர்களாக இருப்பர். நல்லவற்றை அவர்கள் நாடும்போது அல்லவை குறுக்கிடும். அவற்றையெல்லாம் சிறந்த முறையில் கடந்து, அறந்தவறாது, கொள்கைவிடாது, குறிப்பன செய்து முடிப்பவரே காவியத் தலைவர்களாவர். அவர்களே நன்மைக்கும் உண்மைக்கும் என்றுமே அழிவில்லை என்று நாட்டவல்லவர்கள். அவர்களிடம் அறம் நிலைத்து நிற்கும்; பண்பும் பெருமையும் பரிமளிக்கும். பொறுமையின் அடிப்படையில் அவர்கள் இயங்குவர். “பாண்டியன் பரிசு” என்னும் இச்சிறு காவியத்திற்கு இரண்டு தலைமைக் காவிய மாந்தர்கள் அமைகின்றனர். ஒருவன் வேலன்;