பக்கம்:பாண்டியன் பரிசு-ஒரு மதிப்பீடு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 6 துணைக் காவிய மாந்தர்கள் காவியத்தில் வரும் துணைக் காவிய மாந்தர்களை மூவகைப்படுத்தி நோக்கும் மரபும் உண்டு. முதல் வகை: காவியத் தலைவன், தலைவியர் வாழ்வில் தொடர்புடையவராகவும், அவர்கள் வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை உண்டாக்குபவர்களாகவும் செயற்படும் துணைக் காவிய மாந்தர்களை “ஒன்றிய காவிய மாந்தர்கள்” எனலாம். பாண்டியன் பரிசில் ஆத்தாள் கிழவி, வீரப்பன் இவர்களை இவ்வகையில் அடக்கி நோக்கலாம். இரண்டாம் வகை: முதன்மை (தலைமைக் காவிய மாந்தர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், அவர்களுடைய பண்பை நன்கு அறிந்து கொள்ளவும் துணைபுரிந்தும் அவர்களுடன் அதிகமாக ஒட்டியும், ஒட்டாமலும் இயங்கும் காவிய மாந்தர்களை “ஒட்டிய காவிய மாந்தர்கள்” என்று பிரித்து நோக்கலாம். “பாண்டியன் பரிசு” என்ற காவியத்தில் வேழமன்னன், கதிரைவேலன், கண்ணுக்கினியாள் இவர்களை இப்பிரிவில் அடக்கி நோக்கலாம். மூன்றாம் வகை காப்பியக் கதை வளர்ச்சியில் சிறிதளவே இடம் பெற்றுத் தலைமை மாந்தரின் பண்பு விளக்கத்திற்குச் சில சமயம் ஊன்றுகோலாய் விளங்கும் துணைக் காவிய மாந்தர்களை "ஊன்றிய காவிய மாந்தர்கள்” என வேறுபடுத்தி நோக்கலாம். இந்தக் காவியத்தில் பங்குபெறும், பொன்னப்பன், நீலன்-நீலி இவ்வகையில் அடங்குவர். 1. ஒன்றிய காவிய மாந்தர்கள் (1) ஆத்தாள் கிழவி இவள் கள்வர்தலைவன் வீரப்பனின் துணைவி. தன் கணவனுடைய தீய ஒழுக்கத்தை வெறுத்து அவனை விட்டுப் பிரிந்தவள். “தீண்டு வீராயின் எம்மைத் திருநீல 1. உலகப் பெருங்கவிஞர் கம்பர்- பக்.235