பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பாண்டிய மன்னர்

னும், அவற்றைக்காட்டிலும் சிறப்பாக அரசனிடம் இருத்தற்குரிய பொருள்கள் சில உள. அவை செங்கோலின் சிறப்பை விளக்க மிகவும் அவசியமாம். அவை தாம் உழவு கோலும், துலைக் கோலும், பல வகைத் தொழிலாளர் படைக் கலங்களுமாம். வியவசாயம் வியாபாரம் என்ற இரண்டும் இல்லை யென்றால், எந்நாடும் சிறப்படையாது. தொழில் வளம் மிகப் பெறா நாடு செல்வ வளம் பெற வழியில்லை. ஆகையால், இவற்றை நிலை பெறச் செய்ய முயல்வது அரசர் கடமையேயா மென்பதை யாம் கூற வேண்டுமோ!" என்று கூறினர். பாண்டியன் நன்மாறன், அவற்றைக் கேட்டுத் தன்னுடைய சிந்தனைகளுக்கு மாறுபாடாகத் தோன்றினும் தலையசைத்து, அங்கீகரித்துக்கொண்டான். பிறகு புலவர் சில பாடல்கள் பாடி, அவனை மனமார வாழ்த்தினர். அவர்தம் பாடல்களை ஏற்றுக்கொண்ட பாண்டியன் உடனே பரிசில் வழங்கக் கூடிய நிலையில் அப்பொழுது இருக்கவில்லை. ஆகையால், புலவரைப் பார்த்து, "ஐய, அருந்தமிழ்ப் புலவரே, நுமது செய்யுட்கள் செவிக்கின்பம் பயப்பனவாய் உள்ளன. நும்மைப் போன்ற பெரும்புலவர்களைக் கண்டு அளவளாவிப் பல நாட்கள் ஆயின. இன்னும் சில நாட்கள் நீவிர் இந் நகரிலேயே இருக்க வேண்டும். பிறகு பரிசில் தந்து விடை கொடுத்து அனுப்புகின்றேன். இப்பொழுது விடை பெற்றுக் கொள்ளுங்கள், என்று கூறி அனுப்பினன். புலவரும், அரசன் சில நாள் இருக்கச் சொன்னதற்காக மகிழ்ந்து, அங்கிருந்து வெளியேறி,