பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பாண்டிய மன்னர்

மழையும் வெயிலும் புகுமாயினும் அவற்றுக் கஞ்சாது, பொன்னணி மணியணி பூணாமல், நாணம் ஒன்றே பெரும்பணியெனப் பூண்டு வாழும் எமது கற்பிற் சிறந்த மனைவியை எண்ணியாம் இங்கிருந்து இனிப் புறப்படவேண்டுவதே ஆகும் என்றால் ஆகும் என்பதும், ஆகாது என்றால் இயலாது என்பதும் வெளிப்படச் சொல்வது முறையேயாம். கொடுக்க வியலாத வொன்றைக் கொடுப்பேன் என்று கூறி யேமாற்றலும், கொடுக்க வியல்வதைக் கொடாது ஒளித்தலும் புலவரை வாட்டுவதோடு புரவலர் புகழையும் குறைப்பதாம். இவ்வாறு நீ செய்தாயாகையால், இந்நாள் வரை எமது குடியிற் பிறந்தார் எவரும் இவ்வாறு அரசரால் அவமதிக்கப்படாத வாழ்வுடையராய் இருந்தாராகையால், இதுவரை காணா ஒரு காட்சியை இங்குக்கண்டேம், புலவரை அவமதிப்பதால் அரசர்க்குக் கேடுண்டாகும் என்று கூறுவராதலால், எமக்கு நீ ஒரு நன்மையும் செய்யவில்லையாயினும், நின் நாட்டின் நலத்தின் பொருட்டேனும் நீயும் நின் புதல்வரும் நன்று வாழ்க. நாம் போகின்றோம்.

“அரசே, எம்முள்ளத்தில் தோன்றிய இக்கருத்துக்கள் பிற்காலத்தில் உனக்கு நன்மையுண்டாம் பொருட்டும் உன் குடியிற் பிறந்தார் எவரும் இவ்வாறு புரியாமைப் பொருட்டும் பயன்படுமாறு இறைவன் திருவருளால் செய்யுளாகவே எழுகின்றன. அச்செய்யுளைச் செவியேற்ற பிறகேனும் உனது மனம் மாறிப் பண்டு போலப் புலவரைப் போற்று வாய் என நம்புகின்றோம். செய்யுளைக் கேட்பாயாக:

“ஒல்லுவ தொல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லா தில்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே;

ஒல்லா தொல்லு மென்றலும் ஒல்லுவ(து)